Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » கண்கெட்ட பின்பு சூரிய உதயம்-மக்களின் பணத்தை வாரிச்சுருட்டிய மோடி தப்பிச்சென்ற பிறகு பாஸ்போர்ட் முடக்கம்??

கண்கெட்ட பின்பு சூரிய உதயம்-மக்களின் பணத்தை வாரிச்சுருட்டிய மோடி தப்பிச்சென்ற பிறகு பாஸ்போர்ட் முடக்கம்??

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 1,400 கோடிக்கு மோசடி செய்த நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மொகுல் சோக்சி இருவரது பாஸ்போர்ட்டையும் இந்திய வெளியுறவுத்துறை முடக்க உத்தரவிட்டுள்ளது

👤 Saravana Rajendran18 Feb 2018 3:44 PM GMT
கண்கெட்ட பின்பு சூரிய உதயம்-மக்களின் பணத்தை வாரிச்சுருட்டிய மோடி தப்பிச்சென்ற பிறகு பாஸ்போர்ட் முடக்கம்??
Share Post

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்துள்ள ரூ. 1,400 கோடி மக்கள் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற முக்கிய குற்றவாளிகளாக நிரவ் மோடி மற்றும் மோகுல் சோக்சி இருவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர்களது பாஸ்போர்ட்டை முடக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டது.
பாஸ்போர்ட் சட்டம் 1967, சட்டப்பிரிவு 10 (3) (c) கீழ், இவர்களது பாஸ்போர்ட்டை ஏன் முடக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தை ஒருவார காலத்திற்குள் இவர்கள் அளிக்க வேண்டும். அப்படி அளிக்காவிட்டால், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இவர்களது பாஸ்போர்ட்டை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.
கீதாஞ்சலில் ஜெம்ஸ் தலைவர் மோகுல் சோக்சி, அதன் பங்குதாரரும் நீரவ்மோடி வைர நகை வர்த்தக நிறுவனத்தின் தலைவருமான நீரவ் மோடி இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மக்கள் பணத்தை போலியான உத்திரவாதப் பத்திரம் கொடுத்து கொள்ளை அடித்தது தொடர்பாக சிபிஐ புகார் அளித்து இருந்தது.
இதன் பேரில் இவர்கள் மற்றும் இந்த மோசடியில் தொடர்புடைய மற்றவர்கள் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனையின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த மோசடி தெரிய வந்தபோது இவர்கள் இருவரது பாஸ்போர்ட்டையும் முடக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கேட்டுக் கொண்டது.
ஆனால், நிரவ் மோடி, அவரது மனைவி எமி, நிரவ் சகோதரர் நிஷால் மற்றும் அவர்களது உறவினர் மோகுல் சோக்சி ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார அமைப்பின் சந்திப்புக் கூட்டத்தில் நிரவ் மோடியும் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. தற்போது நிரவ் எந்த நாட்டில் இருக்கிறார் என்ற தகவல் உறுதியாக வெளியாகவில்லை. அவரது மனைவி எமி அமெரிக்காவிலும், நிஷால் பெல்ஜியத்தில்யும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.