Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ஜஸ்டின் ரூடோவை அவமதித்த மோடி-சீமான் கண்டனம்

ஜஸ்டின் ரூடோவை அவமதித்த மோடி-சீமான் கண்டனம்

இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவிற்கு உரிய மரியாதை அளித்திராது அவரைப் புறக்கணித்து அவமதிக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயலானது வன்மையானக் கண்டனத்திற்குரியதாகும்.மத்தியில் ஆளும் மோடி அரசின் தேவையற்ற இந்த அணுகு முறையினால் சர்வதேச அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பைக் குலைக்கும் வகையிலான கருத்துருவாக்கங்கள் உருவாகி கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.

👤 Saravana Rajendran22 Feb 2018 4:32 AM GMT
ஜஸ்டின் ரூடோவை அவமதித்த மோடி-சீமான் கண்டனம்
Share Post

இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கௌரவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எட்டு நாட்கள் சுற்றுப்பயணமாக குடும்பத்துடன் இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவிற்கு உரிய மரியாதை அளித்திராது அவரைப் புறக்கணித்து அவமதிக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயலானது வன்மையானக் கண்டனத்திற்குரியதாகும்.மத்தியில் ஆளும் மோடி அரசின் தேவையற்ற இந்த அணுகு முறையினால் சர்வதேச அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பைக் குலைக்கும் வகையிலான கருத்துருவாக்கங்கள் உருவாகி கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பிறிதொரு நாட்டின் தலைவர் இந்நாட்டிற்கு வருகைபுரியும்போது அவரை இந்நாட்டின் தலைவர் நேரில் சென்று வரவேற்று உபசரிப்பது என்பது ஓர் பொதுப்பண்பாடு; காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஓர் நாகரீக மாண்பாகும்
பிறிதொரு நாட்டோடு நல்லுறவைப் பேணவும், அந்நாட்டை எந்த வகையில் மதித்துப் போற்றுகிறோம் என்பதனைக் காட்டவும் இந்த நாட்டிற்குக் கிடைக்கும் ஒரு வாய்ப்பாகவுமே சர்வதேச அரசியல் அரங்கங்கள் அதனைக் கணக்கிட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியா வந்துள்ள கனடா பிரதமரை நேரில் சென்று வரவேற்காது புறக்கணித்ததோடு மட்டுமல்லாது அவ்வரவேற்பு நிகழ்வுக்கு ஒரு கேபினட் அமைச்சரைக்கூட அனுப்பாது வேளாண்துறை இணை அமைச்சரான கஜேந்திர சிங்கை அனுப்பியது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்
கண்டிக்கும் கனட ஊடகங்கள் உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ள தாஜ் மகாலுக்கு கனடா பிரதமர் சென்றபோதும் அந்த மாநிலத்தின் முதல்வர் ஆதித்யநாத் யோகி அவரைச் சந்திக்கவில்லை என்பதிலிருந்து இவையாவும் திட்டமிட்டப் புறக்கணிப்பு வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. இதனால், கனடா நாட்டு ஊடகங்கள் இந்திய நாட்டிற்குத் தனது கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் வைத்து வருகின்றன.
தமிழர்களுக்கு முக்கியத்துவம் தரும் ஜஸ்டின் இந்தியாவில் வாழ்கிற பெருத்தத் தேசிய இன மக்களான தமிழர்களுக்கும், சீக்கியர்களுக்கும் ஆதரவளித்து பெருமளவு முக்கியத்துவம் அளித்து வரும் கனடா நாட்டின் செயல்பாடுகளே இந்திய அரசின் இத்தகையப் புறக்கணிப்புக்குக் காரணம் என்பது வெளிப்படையானது. தமிழர்களின் தேசியத் திருநாளாக இருக்கிற பொங்கல் பெருவிழாவிற்கு அரசு விடுமுறை அளித்ததோடு அம்மாதத்தினைத் தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவித்துத் தமிழர்களுக்குப் பெருமிதம் சேர்த்தது கனடா நாடு என்பது அந்நாடு தமிழர்களுக்கு வழங்கிருக்கும் முதன்மைத்துவதைப் பறைசாற்றும்.
பொங்கல் பண்டிகைக்கு அங்கீகாரம் ஆண்டுதோறும் பொங்கல் பெருவிழா அன்று தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து தனது குடும்பத்தோடு பொங்கல் கொண்டாடி வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தமிழிலே தெரிவித்து தமிழர்களை உள்ளம் பூரிப்படையச் செய்து பெருமைப்படுத்தி வருகிறார். இதுமட்டுமல்லாது கனடா நாட்டின் 150வது விடுதலைத்திருநாளை முன்னிட்டு அந்நாட்டு தேசிய கீதத்தை தமிழிலும் வெளியிட்டு இந்திய நாடுகூட அளித்திட முன்வராத பெரும் அங்கீகாரத்தைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறது கனடா நாடு.
தமிழக அரசு விருந்தினராக அழைக்க வேண்டும் தமிழர்களுக்கு அடைக்கலம் தந்து ஆதரவளித்ததோடு மட்டுமல்லாது உயரிய அங்கீகாரத்தைத் தந்து தமிழர் அடையாளங்களையும், விழாக்களையும் போற்றும் வகையில் நடத்தும் கனடா நாட்டினுடைய பிரதமரைப் பெருமைப்படுத்தி கௌரவிக்க வேண்டியது பத்து கோடித் தமிழ்த்தேசிய இன மக்களுக்கும் தாயகமாக விளங்கும் தமிழக அரசினுடைய தலையாயக் கடமையாகும். ஆகவே, இந்தியா வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைத் தமிழகத்திற்கு விருந்தினராக அழைத்து பெருமைப்படுத்த வேண்டும் என்பது
தமிழ்த்தேசிய இன மக்களின் அவா.
விருந்தோம்பல் செய்ய வேண்டும் தமிழர்களுக்கு கனடா நாடு அளித்து வரும் முன்னுரிமைக்காகவும், முக்கியத்துவத்துக்காகவும் நன்றிப்பெருக்கோடு தமிழர்கள் திரும்பச் செய்கிற விருந்தோம்பலாக இருக்கட்டும் என அறிவுறுத்துகிறேன். ஆகவே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து அவரை விருந்தினராகத் தமிழகத்திற்கு அழைத்து விருந்தோம்பல் செய்து பெருமைப்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.