Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » சமூகநீதிக்கு எதிராக செயல்படும் மத்திய அரசு- நீதிமன்றங்களை எதிர்த்து புரட்சி வெடித்தாகவேண்டும்!
சமூகநீதிக்கு எதிராக செயல்படும் மத்திய அரசு- நீதிமன்றங்களை எதிர்த்து புரட்சி வெடித்தாகவேண்டும்!
கிராமப்புறத்தில் பணியாற்றுவோருக்கு சமூகநீதிக்கு எதிராக மருத்துவ மேற்படிப்புக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடுகளுக்குத் தடையாம்!
👤 Saravana Rajendran26 April 2018 1:58 PM GMT

தமிழ்நாட்டில் இருந்துவரும் மருத்துவ மேற்பட்டப் படிப்பில் ஏற்கெனவே பணியாற்றும் மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு, தொலைதூரத்தில் பணியாற்றுவோருக்கான சலுகை மதிப்பெண்களை ரத்து செய்து நீதிமன்றங்கள் தொடர்ந்து ஆணை பிறப்பிப்பது, சமூகநீதிக்கு எதிரானதாகும். மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசின் கொள்கை இட ஒதுக்கீடுக்கு எதிரானதாகும். இந்த நிலையில், பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் புரட்சி வெடிப்பது தவிர்க்க முடியாதது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
முதுநிலை மருத்துவப் படிப்பில் தொலைதூர, எளிதில் அணுக முடியாத மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, அவர்கள் பெற்ற நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணில் இருந்து 10 முதல் 30 சதவீதம் வரையான சலுகை மதிப்பெண்ணை வழங்க வேண்டும் என்பது இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதியாகும். இதன் அடிப்படையில் தொலைதூர மற்றும் எளிதில் அணுக முடியாத இடங்களை வரையறுத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில் அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசின் இடங்களில் 50 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண் டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அரசு மருத்து வர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும், இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளைப் பின்பற்றி கலந்தாய்வை நடத்தவும் 24.4.2018 அன்று உத்தரவிட்டது. (தினமணி, 25.4.2018)
நீதிமன்றங்களில் தடைகள்
தமிழ்நாட்டில் மாநில அரசின் கிராமப்புற மருத்துவ மனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ பட்டமேற்படிப்பு வகுப்புகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவந்தன. இந்த நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சில் முதுநிலைக் கல்வி முறைப்படுத்துதல் விதி ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன்படி, முதுநிலை மருத்துவக் கல்வி வகுப்புகளுக்கும் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதோடு, கிராமப்புறத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டது.
இதற்கு முன்பு 2012ஆம் ஆண்டில் இந்தச் சட்டத் திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. பிறகு மேல்முறையீட்டின்போது 2015ஆம் ஆண்டில் மீண்டும் அனுமதியளித்தது. அதே நேரத்தில் தொலை தூரப் பகுதிகள், மலை கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு தகுதித் தேர்வில் கூடுதல் மதிப்பெண் அளித்து அவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வி இடங்கள் கிடைக்க வகைசெய்யலாம் என்றும் கூறியது.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு முதுநிலை மருத் துவர் ராஜேஷ் வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். கிராமப்புற மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களை பொதுப் பிரிவுக்குக் கொண்டுவந்து, தன்னைப்போல தொலைதூரங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் இடம் கிடைக்க வகை செய்ய வேண்டுமென அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லாது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படியே தமிழக அரசு நடக்க வேண்டும். இதில் தமிழக அரசின் விளக்கக் குறிப்பேடு பொருந்தாது'' என்று 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி அன்று தீர்ப்பளித்தார்.
மாறுபட்ட தீர்ப்புகள்
இதையெதிர்த்து தமிழக அரசின் சார்பிலும், மருத்து வர்கள் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.கே. சசிதரன், எஸ்.எம்.சுப்பிர மணியன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இது தொடர் பாக மே 17, 2017 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், இரு நீதிபதிகளும் மாறுப்பட்ட கருத்துகளைத் தெரிவித் துள்ளனர்.
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளின் அடிப்படையிலேயே இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒரு நடைமுறை பல ஆண்டுகளாக இருப்பதாலேயே அதைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார். நீதிபதி சசிதரன், முந்தைய தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.
முட்டுக்கட்டை! முட்டுக்கட்டை!!
20.4.2018 அன்று முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவதற்கான தமிழக அரசின் ஆணை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை இந்த ஆண்டும் முட்டுக் கட்டைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது தமிழகத்தில் 1603 மருத்துவ பட்ட மேற் படிப்பு, பட்டயப் படிப்பிற்கான இடங்கள் இருக்கின்றன. இதில் பாதி இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகின்றன. மீதி இருக்கும் இடங்களில் பாதி இடங்கள் கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் கிராமப் புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்து வர்களின் மேற்படிப்பிற்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பே சீர்குலையும் நிலை உருவாகிவிட்டது .
மாநில அரசுக்கு உரிமை இல்லையா?
மாநில அரசின் நிதியில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் சம்பந்தப்பட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர் களுக்கு வாய்ப்பு அளிப்பது என்பது தவறான காரி யமா? நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைக்கும் வேலை யல்லவா இது.
தகுதிபற்றி எல்லாம் நீதிபதிகள் பேசலாமா?
தகுதி போய் விடும் என்று உச்சநீதிமன்றம் சொல் லுகிறதே - இப்பொழுதெல்லாம் உச்சநீதிமன்ற நீதிபதி களின் தகுதி - திறமையெல்லாம் காற்றில் பறந்துகொண்டு இருப்பதை நாடு பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.
மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சியும் சரி, நீதிமன்றங் களும் சரி சமூகநீதிக்கு எதிரான உணர்வில் வேக வேகமாகச் செயல்படுவதைக் காண முடிகிறது.
கிராமங்கள் என்றால் நான்காம், அய்ந்தாம் வருணம்தானா?
சாலை வசதிகள் இல்லாத மலைப்பிரதேசங்களிலும், கிராமப்புறங்களிலும் மருத்துவர்கள் பணியாற்றும் நிலை - இந்தத் தீர்ப்பின்மூலம் தடைப்படக் கூடிய அபாயம் இருக்கிறது.
கிராமங்கள் என்றால் வருணாசிரமத் தன்மையில் நான்காம் நிலை, அய்ந்தாம் நிலையில் இருப்பதைத் தந்தை பெரியார் கூறி வந்திருக்கிறார். மத்தியில் உள்ள ஆட்சி வருண தர்மத்தைக் காக்கக்கூடிய இந்துத்துவா ஆட்சியாக இருப்பதால், இன்னும் இத்திசையில் மேலும் மேலும் அநீதிகள் அணிவகுத்து வரவே வாய்ப்புள்ளது.
மாநில அரசு மேல்முறையீடு செய்யப் போவதாகக் கூறுகிறது - பெரும்பாலும் மாநில அரசின் செயல்பாடுகள் கண்துடைப்பு மயமாகத்தானிருந்து வருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை
ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள டாக்டர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இதனை அகில இந்திய அளவிலும் எடுத்துச் செல்லவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளை மறந்து சமூக நீதிக்கு இழைக்கப்படும் அநீதியைத் தடுத்து நிறுத்திட ஒன்று சேர்ந்து போராடவேண்டும்.
குஜராத் முதல்வர் மோடி சொன்னது என்ன?
எங்கள் மாநிலத்தில் 98 சதவிகிதம் பேர் மாநில அரசின் கல்வித் திட்டத்தில் படிக்கிறார்கள். அப்படி இருக்கும்பொழுது நீட்' தேர்வை நாங்கள் எப்படி ஏற்க முடியும்?'' என்று குஜராத் முதலமைச்சராக இருந்தபோது சொன்ன நரேந்திர மோடி, பிரதமரான நிலையில், பிராமணராகி' விட்டாரே!
வெடிக்கட்டும் புரட்சி!
பஞ்சம, சூத்திர, சிறுபான்மை மற்றும் கிராமப்புற மக்களின் புரட்சி வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!!
கி.வீரமணி
தலைவர் திராவிடர் கழகம்.
26.4.2018
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire