Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » தொடர்ந்து உயிர்பலிவாங்கும் நீட் தேர்வு-சேலத்தில் கோடூரத்தற்கொலை செய்த மாணவன்
தொடர்ந்து உயிர்பலிவாங்கும் நீட் தேர்வு-சேலத்தில் கோடூரத்தற்கொலை செய்த மாணவன்
நீட் தேர்வு பயம் காரணமாக சேலத்தில் பிளாஸ்டிக் பையை தலையோடு கட்டி மூச்சை நிறுத்தி தற்கொலை செய்துகொண்ட மாணவனால் மீண்டும் நீட் தேர்வு ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
👤 Saravana Rajendran26 April 2018 5:28 PM GMT

சேலம் தமிழ் சங்க சாலையைச் சேர்ந்தவர் லாரன்ஸ். கருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், இன்ஜினியராக பணிபுரிகிறார். அவரது மகன் கெவின்ஹரி, கடந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வில் 1056 மதிப்பெண் பெற்றிருக்கிறார். மருத்துவம் பயில ஆசைப்பட்டு நீட் தேர்வு எழுதி 213 மதிப்பெண் எடுத்திருக்கிறார். ஆனால் அவரால் மருத்துவம் சேர முடியவில்லை. இதனால் பெற்றோரிடம் எப்படியாவது நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டராகி விடுவேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். மகனின் உறுதியும் தன்னம்பிக்கையும் லட்சியத்தையும் கண்ட பெற்றோர் ஆச்சயரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
எனவே கெவினுக்கு வீட்டில் படிப்பதற்காக தனி அறை ஒதுக்கிக் கொடுத்ததுடன், மேலும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்கள். கெவினும் விடிய, விடிய படித்துக் கொண்டிருப்பாராம். இதை தவிர 'நீட்' தேர்வு எழுத, சேலத்திலுள்ள தனியார் மையத்தில் பயிற்சி பெற்றும் வந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி வரை கெவின் படித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, தாய் மேரி ரோஸ்லின், அவரது அறைக்கு செல்ல முயன்றார். ஆனால் கதவு உட்புறமாக பூட்டியிருந்ததால், நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த லாரன்ஸ், கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தபோது, தலையிலிருந்து கழுத்து வரை பிளாஸ்டிக் பாலிதீன் கவரால் சுற்றப்பட்டு, ஷூ கயிற்றால் கழுத்தைக் கட்டி மூச்சுத்திணறி இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
அனிதாவுக்கு வந்த நிலை இன்னொருவருக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைப்பதற்குள் அடுத்த மரணம் நம்மை உலுக்கி போட்டு விடுகிறது. மத்திய அரசு மாணவர்களின் மேல் செலுத்தும் இந்த கல்வி வன்முறைக்கு என்று தீர்வு ஏற்பட போகிறதோ தெரியவில்லை. அனிதாவின் மரணத்தின்போது, யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தன்னிச்சையாக பொதுமக்களும், மாணவர்களும் தெருவில் இறங்கி போராடி கதறியும் மத்திய அரசின் காதுகளில் இதுவரை விழாமல் உள்ளது. ஒரு தலைமுறையின் பெருங்கனவையே இந்த தேசம் சிதைத்து கொண்டிருக்கிறது வேதனையளிக்கிறது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire