Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » திருப்பதிக்கு ஒரு பார்வை கீழடிக்கு மறுபார்வை- மத்திய தொல்லியல் துறையின் இரட்டை பார்வை

திருப்பதிக்கு ஒரு பார்வை கீழடிக்கு மறுபார்வை- மத்திய தொல்லியல் துறையின் இரட்டை பார்வை

உலகிலேயே மிகவும் வருமானம் உள்ள கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்றாகும். இந்த...

👤 Saravana Rajendran8 May 2018 10:31 AM GMT
திருப்பதிக்கு ஒரு பார்வை கீழடிக்கு மறுபார்வை- மத்திய தொல்லியல் துறையின் இரட்டை பார்வை
Share Post

உலகிலேயே மிகவும் வருமானம் உள்ள கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலின் நிர்வாகத்தை ஆந்திர மாநில அறநிலையத்துறை கவனித்து வருகிறது. ஆந்திர அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவிலுக்கு சொந்தமான பல கட்டிடங்களை உடைத்து மாற்றி அமைப்பதாக பல புகார்கள் எழுந்துள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். 1933 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோயிலை பராமரித்து வருகிறது. திருமலை ஏழுமலையான் கோயில் மட்டுமன்றி, வராக சுவாமி கோயில், திருப்பதி கோவிந்தராஜ பெருமாள், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், ஸ்ரீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேச பெருமாள், கபிலேஸ்வரர் கோயில், கோதண்டராமர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பராமரித்து வருகிறது.
இந்த நிலையில் கோவில்களுக்கு வழங்கப்படும் காணிக்கைகளை பத்திரமாக வைக்கப்படவில்லை எனவும் பழங்கால மன்னர்கள் வழங்கிய நகைகள் உட்பட பல சொத்துக்கள் பாதுகாப்புடன் இல்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பி வருகின்றன.
தற்போது மத்திய தொல்லியல் துறை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அந்தக் கடிதத்தில், பழங்கால சிறப்பு மிக்க கட்டிடங்களை மாற்றி அமைப்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளது. அத்துடன் திருப்பதி கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் நிலம் ஆகியவை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது. இதனால் திருப்பதி கோவில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படலாம் எனவும் அதன் பின் கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் எனவும் செய்திகள் பரவி உள்ளது.
அமராவதி தொல்லியல் துறை, சார்பில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி அணில்குமார் சிங்காலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனைக் கண்ட தேவஸ்தான அதிகாரிகள், நீதிமன்றத்தை நாட முடிவு செய்தனர். மேலும் இந்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் கிளப்பியது. உலகிலேயே பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்குகீழ் கொண்டு வர மத்திய அரசு ஏன் முயற்சிக்கிறது என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் ஆந்திர மாநில அரசும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துளது. வேண்டுமென்றே ஆந்திர அரசின் உள்விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாக ஆளும் தெலுங்கு தேசம் கட்சி புகார் கூறி உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரும், குடியரசு துணைத்தலைவருமான வெங்கையா நாயுடு மத்திய அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக அதிருப்தி தெரிவித்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், மத்திய தொல்லியல் துறை நேற்று அமராவதி தொல்லியல் துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், ஏற்கனவே அனுப்பப்பட்ட நோட்டீசை வாபஸ் பெறுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஏற்கனவே அனுப்பப்பட்ட நோட்டீஸ் வாபஸ் பெறப்படுவதாக ஆந்திர தொல்லியல் துறை சார்பில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு இன்று கடிதம் அனுப்பப்பட்டது.
தமிழகத்தில் அகழ்வாராய்ச்சி நடத்த இருந்த கீழடி, ஆதிச்ச நல்லூர், உள்ளிட்ட பல இடங்களின் அகழாய்வை தமிழார்வலர்கள் தாங்களே மேற்கொள்கிறோம் என்று கூறியும் தமிழக அரசும் தமிழக பகுதிகளில் அகழ்வாய்வு செய்யும் வலிமை தொழில்நுட்பவல்லுனர்கள், அனைத்தும் எங்களிடம் இருக்கிறது என்று தெரிவித்தும், மத்திய அரசு வலுக்கட்டாயமாக தனது அகழாய்வு அமைப்பின் கீழ் எடுத்துக்கொண்டு அகழாய்வு வேலைகளை நடத்தாமல் அனைத்து பகுதிகளையும் மூடிவருகின்றனர். ஆனால் முறைகேடுகள் நடக்கிறது என்று தெரிந்த பிறகு மத்திய தொல்லியல் துறை திருப்பதி கோவிலை தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுக்காமல் எடுத்த முடிவையும் பல மேலிட அழுத்தம் காரணமாக கைவிட்டு வருகிறது.