Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ஜீயர் அடம், உண்ணா நிலையை தொடருவாராம்

ஜீயர் அடம், உண்ணா நிலையை தொடருவாராம்

ஆண்டாள் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான தனது உண்ணாநிலையை தொடரும் சிறீவில்லிபுத்தூர் ஜீயர்.

👤 Saravana Rajendran8 Feb 2018 9:26 AM GMT
ஜீயர் அடம், உண்ணா நிலையை தொடருவாராம்
Share Post

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து முன்பு ஒருவர் எழுதிய நூலை மேற்கோள் காட்டி கூறிய கருத்து பெரும் விவாதப் பொருளானது. இதனால் வைரமுத்துவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. வைரமுத்து மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனது கருத்து திரித்து கூறப்பட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தார் வைரமுத்து.


இந்நிலையில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி சிறீ வில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் இன்று முதல் மீண்டும் உண்ணாநிலையை மேற்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் வைரமுத்துவும் ஆண்டாளின் குழந்தைதான் என்றார்.

வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாநிலை தொடரும் என்றும் ஆண்டாள் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாநிலை நீடிக்கும் என்றும் ஜீயர் தெரிவித்தார். தனது உண்ணாநிலைக்காக யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை என்ற அவர், ஆதரவு கொடுப்பவர்கள் கொடுக்கலாம் என்றார். மேலும் அனைவரும் ஆதரவு தருவார்கள் என்றும் அவர் கூறினார். இது ஒரு ஆன்மிக போராட்டம் என்றும் ஜீயர் கூறினார். மேலும் யார் மனதையும் புண்படுத்தக்கூடிய போராட்டம் இல்லை என்றும் அவர் கூறினார். கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் 2 நாட்கள் உண்ணாநிலை மேற்கொண்டிருந்தார் ஜீயர். ஆனால் திடீரென தனது உண்ணாநிலையை பாதியிலேயே முடித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் தனது ஆசிரமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனக்கும் கல் எறியத்தெரியும், சோடா பாட்டில் வீசத்தெரியும் என்று வன்முறையைத்தூண்டும் விதத்தில் பேசியவரும் இதே ஜீயர் தான்