Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ஆந்திராவிற்காக போராட்டம் தொடர்கிறது, தமிழக அரசு என்ன செய்கிறது?

ஆந்திராவிற்காக போராட்டம் தொடர்கிறது, தமிழக அரசு என்ன செய்கிறது?

ஆந்திர மாநிலத்திற்கு நிதிநிலை அறிக்கையில் சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் ஆந்திர நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரும் கட்சி வேறுபாடு இன்றி குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழகத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானது இது குறித்து வாய் திறக்காமல் அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

👤 Saravana Rajendran8 Feb 2018 9:52 AM GMT
Share Post

இந்திய நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்த இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சாமானியர்களுக்கு சிறப்பான சலுகைகள் எதுவும் இல்லை. எப்போதும் போல் போலி அறிவிப்புகள் தான் இருந்தது.
இந்நிலையில் நிதிநிலை அறிக்கை வெளியான அடுத்த நாளே ஆந்திர மாநிலத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு போர்க்கொடி தூக்கினார்.
அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இது குறித்து விவாதித்த கையோடு கூட்டணி நியதி என்பது ஒருபுறம் இருந்தாலும் மாநில வளர்ச்சி முக்கியம். எனவே மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து ஆந்திரா வளர்ச்சிக்கு சிறப்பு நிதியை பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களால் முடிந்த வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் இதனால் வெளிநடப்பு நடவடிக்கை பாய்ந்தாலும் அதற்காகத் தயங்கக் கூடாது என்று உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். இதற்கு ஏற்றாற் போல நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிகள் ஆந்திர விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிகள் இன்று காலையில் கையில் பதாகைகளை ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டனர். மற்றொருபுறம் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் இன்று ஆந்திராவில் முழுஅடைப்பு நடைபெற்று வருகிறது. அரசியல் ஆதாயங்களைத் தாண்டி தங்கள் மாநில வளர்ச்சிக்காக அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் என அனைவரும் ஒன்றை நிலைப்பாட்டோடு போராடி வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் தொழில்துறை பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், விவசாயமும் கடுமையான நெருக்கடியில் இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை, உள்கட்டமைப்பு மேம்பாடு என்று தமிழகத்தின் நிதி தேவை அதிக அளவில் இருக்கிறது. ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை மறுசீரமைக்கவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவி செய்யவும் அரசு கோரிய நிதியை முழுமையாக மத்திய அரசு வழங்கவில்லை. ஆனால் தமிழக முதல்வர் நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்த கையோடு தனது கடமையை முடித்துக் கொண்டார், மற்றொருபுறம் தமிழகத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பார்த்து மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோரப்படும் என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
அண்டை மாநிலமான ஆந்திரா தங்களுக்கு சிறப்பு நிதி கேட்டு நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பி வருகிறது. ஆனால் தமிழகத்திற்கு நிதிநிலை அறிக்கையினால் தன்நிறைவு கிடைத்துவிட்டது போல அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மவுனமாக இருப்பது ஏன்? பதவிக்காக மத்திய அரசை எதிர்க்காமல் இருப்பது தான் அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு அவர்கள் செய்யும் வேலையா என்று தமிழக மக்கள் கேள்விகேட்கத்துவங்கிவிட்டனர்.