Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » கல்வியும் பாலியல் நீதியும்

கல்வியும் பாலியல் நீதியும்

மனித உரிமைகள் அனைத்துக்கும் குழந்தைகளின் கல்வி உரிமையே அடிப்படையாக உள்ளது. குழந்தைகளின் கல்வி...

👤 Saravana Rajendran20 Feb 2018 3:43 PM GMT
Share Post

மனித உரிமைகள் அனைத்துக்கும் குழந்தைகளின் கல்வி உரிமையே அடிப்படையாக உள்ளது. குழந்தைகளின் கல்வி உரிமையை கருவியாகக் கொண்டு பாலியல் நீதியை அடையலாம் என்று ஜெர்மானிய பேராசிரியர் கிளாடியா கருத்து தெரி வித்துள்ளார்.
சமகால சமூகப்பிரச்சினைகளில் பாலியல் நீதியில் சமுதாயப்பணிகளின் பொறுப்பு எனும் தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. மக்கள் நல அரசில் பாலின நீதியை புறந்தள்ளுகின்ற மற்றொரு கூறாக ஆணவக்கொலை, சூழலியல் மரபுகள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது-.
கல்வி பெறப்படுவதன்மூலமாகவே உரிமைகள் பெற முடியும். தலை, இதயம், கரங்கள் என அனைத்து உறுப்புகளும் ஒன்றிணைவதன்மூலமாகவே அறிவு, சிந்தனை, செயல்களின் மூலமாக ஆற்றல் மேம்பட கல்வி மூலமாகபெறுகின்ற உரிமை இன்றியமையாத தாகும்.
ஜெர்மனியில் உள்ள கோபர்க் செயல்முறை அறிவியல் பல்கலைக்கழகத்தில் சமுதாயப்பணித்துறை தலைவர் கிளாடியா 12.2.2018 அன்று கருத்தரங்கில் பேசியபோது குறிப்பிட்டதாவது:
"பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனத்தின் மய்யப் புள்ளியாக மூன்று கருத்துகள் குறிப்பிடப்பட்டன. முதலில் கல்விபெறும் உரிமை, அடுத்தது கல்வியில் உள்ள உரிமை, மூன்றாவது கல்வி கற்பதன்மூலமாக பெறப்படுகின்ற உரிமை (rights to education, rights in education and rights through education) ஆகியவையே அம்மூன்றுமாகும். அம்மூன்றையும் சமுதாயத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரும் பெறுவது எளிதாக இல்லை என்றாலும், அனைவரும் பெற்றாக வேண்டும். அதிலும் குறிப்பாக இடைத் தன்மைப் பாலினக் குழந்தைகளும் பெற்றிட வேண்டும்.
500 குழந்தைகளில் ஒரு குழந்தை இரு பால் குணங்களுடன் இடைப்பாலினத் தன்மையுடன் பிறக்கிறது. அறுவை சிகிச்சைக்குப்பிறகு அக்குழந் தைகள் பெரும்பாலும் பெண் குழந்தைகளாகவே அடையாளப்படுத்தப்படுகின்றனர். காலப்போக்கில் வளர்ந்து வருகின்ற சூழலில் அவரவர் விருப்பத்துக் கேற்ப பாலினத்தைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட பாலினத்தை அவர்கள்மீது திணிக்கக்கூடாது. இதுபோன்ற உரிமைகள்குறித்த விழிப்புணர்வை மக்கள் பெற வேண்டியது அவசியமானதாகும். அக்குழந்தைகளின் உரிமைகளுக்காகப் போராட வேண்டும். அதன்படி பாலியல் நீதி குறித்த விழிப்புணர்வை பெற்றிட குழந்தைகளுக்குக் கல்வி அவசியமாகும். கல்வி எப்போதுமே நடுநிலையுடன் அளிக்கப்படவில்லை. உரிமைகளின்மீதான ஆதிக்கம் செலுத்த கல்வி தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது'' என்றார்.
இது ஒரு நுட்பமான ஆழமான கருத்தாகும்.
தந்தை பெரியார் அவர்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே இது தொடர்பாகக் கூறிய தொலைநோக்குச் சிந்தனையைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
உலகத்திலேயே தங்களைத் தவிர மற்றவர்களுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்பதை மத ரீதியாக தடைக்கல் போட்டு வந்தவர்கள் பார்ப்பனர்கள் இதனை எதிர்த்தே தன்னுடைய சமுதாய, அரசியல் பார்வை என்பதை மய்யப்படுத்தித் தொண்டாற்றி வந்தவர் தந்தை பெரியார்.
1925 ஆண்டுகளில் பெண்ணுரிமை பெண் கல்வி பற்றி எல்லாம் பேச ஆரம்பித்தார். பல மாநாடுகளில் இந்தத் திசையில் தீர்மானங்களை நிறைவேற்ற செய்தார். சுயமரியாதைத் திருமண மேடையை உருவாக்கி, அந்த மேடையே இந்த வகையில் மிகப் பெரும் பிரச்சாரத்துக்கும் பயன்படுத்தி பெரு வெற்றியையும் கண்டுள்ளார்.
குழந்தைத் திருமணம் சட்டப்படி ஒழிக்கப்பட்டு, அவர்களுக்குக் கல்வி புகட்டப்பட வேண்டும் என்று கூறினார்.
பெண்களை மெல்லியலர் என்று அழைப்பதை எதிர்த்தார். கும்மி, கோலாட்டம் கலாச்சாரங்களை விட்டு ஒழிக்கச் சொன்னவர். மாறாக உடற்பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் அனைத்து வித்தைகளிலும் பயிற்சிப் பெற வேண்டும் என்று சொன்னவரும் அவரே!
பாலியல் நீதி என்பது பெண் இன்னொரு ஆடவனைச் சார்ந்து இருக்கக் கூடாது என்பதுதான் இதன் உட்பொருளாகும். பாலியல் நீதியை கல்விச் சக்கரத்துடன் இணைப்பதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். இவ்வகையில் பெண்கள் பெருங்குரல் கொடுத்து தங்களுக்கான உரிமைகளை சட்டப்படி பெற்றாக வேண்டும் - பெறுவார்களாக!