உலகப் புத்தக நாள்

உலக புத்தக நாள் உலகெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அய்ரோப்பாவில் வாழ்ந்த தலை சிறந்த...

👤 Saravana Rajendran23 April 2018 2:43 PM GMT
உலகப் புத்தக நாள்
Share Post

உலக புத்தக நாள் உலகெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அய்ரோப்பாவில் வாழ்ந்த தலை சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதால் இந்த நாளை உலக, புத்தக தினமாகக் கொண்டாட தேர்ந்தெடுத்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி, வரலாறுகள் பற்றி அறிந்து விழிப்புணர்வு பெறுவதற்குப் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக விளங்குகிறது. இதனால், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளைப் போற்றும் வகையில் ஏப்ரல் 23ஆம் தேதியை உலக புத்தக தினமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூலக உரிமை, உலகில் உள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் அவரவர் தாய்மொழியில் பெறுதல், தத்தமது தாய் மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்துதல், புத்தகங் களுக்கும், வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட 10 கட்டளைகளை அனைத்து நாடுகளிலும் நிறைவேற்றுவதன் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவாக்க முடியும். மேற்கூறிய 10 கட்டளைகளையும் நிறைவேற்ற உறுதி ஏற்கும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக நடப்புகளில் நூல்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது, ஏன் தெரியுமா? ஒரு நூல் மனிதருக்கு நன்மை தருமாயின் அந்த நன்மையினால் பாதிக்கப்படும் கூட்டம் தனக்கென்று சில பொய்யான கருத்துக்களைப் பரப்பி அதையே மெய்யெனச் சொல்லிவரும். இன்றைய வேதம், புராணம் மற்றும் மேற்கத்திய மத நூல்கள் இதற்கு எடுத்துக்காட்டாகக் கிளம்பின.
இந்தியாவை எடுத்துக்கொண்டால் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பவுத்த எழுச்சியின் காரணமாக மக்கள் மூடநம்பிக்கை இருளிலிருந்து விலகிப் புத்துணர்ச்சி பெற்றனர். இதன் மூலம் மக்கள் அறிவுடைமை மற்றும் வாழ்வியல் விழிப்புணர்வைப் பெற்றனர். இதற்கு முக்கிய காரணம் பகுத்தறிவுக் கருத்துக்கள் அடங்கிய நூல்கள் எளிய மொழியில் மக்களிடையே அதிகம் பரவியதுதான். இன்று கூட மதுரை அருகே உள்ள அரிட்டாபட்டி என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் சடங்குகளால் எந்த ஒரு நன்மையுமில்லை என்ற சொல் உள்ளதை காண்கிறோம், அரிட்டாபட்டியில் பவுத்த துறவிகள் சங்கம் ஒன்று முன்பு இருந்ததை பல ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர். இதன்படி அப்போதைய அறிவார்ந்த நூல்கள் சமய சடங்குகளைக் கடுமையாக எதிர்த்து வந்தன. குறள் 2500 ஆண்டுகளுக்குமுன் இதற்காகக் குரல் கொடுத்தது.
அறிவார்ந்த சமூகம் உருவாவதைத் தடுத்து நிறுத்த பொய்களைக் கூறும் புனைச் சுருட்டுகள் மதத்தின் முகத் திரையோடு நூல்களாக வெளி வரத் தொடங்கின. இந்தியாவில் எட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு அறிவார்ந்த நூல்கள் அழிக்கப்பட்டன. ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களால் அந்த நூல்கள் அழித்தொழிக்கப்பட்டன. நூல்களை எழுதியவர்கள் சாகடிக்கப்பட்டனர். குறிப்பாக இந்தியாவில் பவுத்தம் அழிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் நாளாந்தா பல்கலைக் கழகம் எரியூட்டப்படவில்லையா?
இலங்கையில் புகழ் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் தீயூட்டப்பட்டது. மேற்கத்திய நாடுகளிலும் அறிவியல் நூல்களை எழுதியவர்கள் தீக்கிரையாக்கப்பட்டுக் கொல்லப் பட்டனர் - தூக்கிலிடப்பட்டனர். ஆனால் மதநூல்களின் கருத்துக்களைப் பரப்பியவர்களுக்கு புதிதாக கண்டுபிடிக் கப்பட்ட தீவுகள் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டன. அவர்களின் நினைவாக பல நகரங்களுக்குப் பெயர் சூட்டப்பட்டதுமுண்டு. ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை மீண்டும் ஒரு கற்காலத்திற்கு நாடு சென்றுகொண்டு இருக்கிறது. பகுத்தறிவு கருத்துக்களை தொடர்ந்து எழுதிவரும் நரேந்திர தாபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி, கடந்த ஆண்டு அக்டோபரில் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் போன்றவர்கள் கொல்லப்படு கின்றனர். அறிவார்ந்த நூல்கள் தேடித்தேடி அழிக்கப் படுகின்றன. ஆளும் அரசியல்தலைவர்கள் மடமைக்குள் ளாக்கும் நூல்களை மக்களிடையே பரப்பும் செயல்களைச் செய்கின்றனர். இன்று உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாள் கொண்டாடும் நோக்கமே இந்தியாவில் சிதைந்து வருகிறது.
தந்தை பெரியாரோ பகுத்தறிவு நூற் பதிப்புக் கழகம் கண்டார். இலண்டன் ஆர்.பி.ஏ. வெளியிட்ட பகுத்தறிவு நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடச் செய்தார். இந்தியாவிலேயே முதன் முதலாக மார்க்ஸ் - எங்கல்ஸ் அறிக்கையை மொழி பெயர்த்து குடிஅரசில் வெளியிட்டவர் தந்தை பெரியாரே! பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை நிறுவனம் இந்த நூல் வெளியீட்டில் மிகப் பெரும் சாதனையைப் படைத்து வருகிறது.
இந்த நிறுவனம் வெளியிடும் நூல்கள் பொருளாதார லாப நோக்கம் கொண்டவையல்ல; இன்னும் சொல்லப் போனால் இந்தளவுக்கு மலிவாக யாரும் விற்பதில்லை. தந்தை பெரியாரின் நூல்கள் பல மொழிகளிலும் கொண்டு வரப்பட்டுள்ளன. நூல்கள் பரப்புதலை ஓர் இயக்கமாகவே இது நடத்தி வருகிறது. மேலும் விரிவாக்கத் திட்டங்கள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் நடக்கும் புத்தகக்கண்காட்சிகளில் எல்லாம் அரங்கங்களை வாடகைக்கு எடுத்து இந்நூல்கள் வெகு மக்களைச் சென்றடையச் செய்வதில் வேகம் காட்டி வருகிறது. புத்தகச் சந்தைகளையும் நடத்தி வருகிறது. நூல்கள் வாசிப்பைப் பெருக்கி - பகுத்தறிவுச் சிந்தனைகளைச் சுவாசிக்கச் செய்வோம்.
உலகப் புத்தக நாளில் இந்த உன்னத உறுதிமொழியை மேற்கொள்வோம்!