Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » தாழ்த்தப்பட்டவர்களை தாஜா செய்யும் நாடகம்!

தாழ்த்தப்பட்டவர்களை தாஜா செய்யும் நாடகம்!

உத்தரப்பிரதேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத் உத்தரப்பிரதேசம் பிரதாப்கட் மாவட்டத்தில் நலத் திட்டங்களை அறிவிப்பதற்காகச் சென்றிருந்தார். அப்போது மதேபூர் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டமக்களின் வீட்டில் அவர் சாப்பிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

👤 Saravana Rajendran26 April 2018 2:11 PM GMT
Share Post

இதை முன்கூட்டியே அறிந்திருந்த பாஜக பிரமுகர்கள் தங்கள் வீட்டிலிருந்தே சாப்பிடும் தட்டோடு சாப்பாடும் கொண்டு வந்திருந்தனர். உள்ளூர் பார்ப்பன பாஜக பிரமுகர் வீட்டிலிருந்து முதல்வர் சாமியார் ஆதித்யநாத்திற்கு உணவு கொண்டுவரப்பட்டிருந்தது, இவ்விவகாரம் வாட்ஸ் அப் மூலம் வெளிவந்துவிட்டது. இது தொடர்பாக பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர் மாயாவதி விமர்சனம் செய்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த ஆதித்யநாத் உதவியாளர் "முதலமைச்சர் விரதமிருக்கிறார்; ஆகவே அவர் விரத உணவு மட்டுமே சாப்பிடுவார். நாங்கள் செல்லும் இடத்தில் உள்ளவர்கள் முதல்வரின் விரதம் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே முதல்வருக்கு விரத உணவு பரிமாறப்பட்டது. அதே நேரத்தில் முதல்வருடன் வந்த பாஜக பிரமுகர்களில் பலர் வெளியிடங்களில் சாப்பிட்டுப் பழக்கமில்லாதவர்கள்; ஆகவே அவர்கள் எப்போதும் போல் வீட்டிலிருந்து உணவு கொண்டுவந்திருப்பார்கள். இருந்தாலும் முதல்வரும், பாஜக பிரமுகர்களும் தாழ்த்தப்பட்ட மக்களின் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டதே எங்கள் கட்சியினரின் ஜாதிபேதமற்ற உணர்வை பிரதிபலிக்கிறது" என்று கூறினார்.
இதே முதல்வர் தன்னிடம் மனு கொடுக்கவரும் தாழ்த்தப்பட்ட மக்கள் தன்னைத் தொட்டுவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட தனிநபர் பின்னாலும் ஒரு காவலர் இருந்துகொண்டு தாழ்த்தப்பட்ட வர்களை முதல்வரைத் தொடாமல் பார்த்துக்கொள்ளும் பணியில் நியமிக்கப்பட்டனர். சகரன்பூரில் ஜாதிக் கலவரம் நடந்து முடிந்த பிறகு அவ்விடத்தைப் பார்வையிடச்சென்ற ஆதித்யநாத் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குச்செல்லும் முன்பு மாநகராட்சி வாகனங்களில் கங்கையில் இருந்து நீர் கொண்டுவரப்பட்டு அனைவரது வீட்டின் முன் வரிசையாக தெளித்துக்கொண்டு போனார்கள். அதன் பிறகு அவர் அத்தெருக்களில் சென்றார். இவ்விவகாரத்தை ஊடகங்கள் வெளிக்கொண்டுவந்த பிறகு முதல்வருக்குத் தூசி அலர்ஜி; ஆகவே அவர் செல்லும் போது தூசி பரவாமல் இருக்க சாலைகளில் தண்ணீர் தெளித்ததாக முதல்வர் அலுவலகம் கூறியது.
அதே போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நலத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த சாமியார் முதல்வர் செல்லும் முன்பு அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாநில அரசு நிர்வாகம் துணி துவைக்கும் சோப்பு, குளிக்கும் சோப்பு மற்றும் முகப்பூச்சு பவுடரை அவர்களுக்குக் கொடுத்து முதல்வர் வரும்போது அனைவரும் குளித்துவிட்டு வாருங்கள் என்று தண்டோரோ அறிவித்த கேவலமும் உண்டு.
உ.பி.யில் மட்டுமல்ல; கருநாடகத்தின் மேனாள் முதல் அமைச்சரும், தற்போதைய பிஜேபியின் முதல் அமைச்சருக்கான வேட்பாளருமான எடியூரப்பா தாழ்த்தப்பட்டோர் பகுதிக்குச் சென்று அவர்கள் வீட்டில் உணவருந்துவதாக பெரிய அளவு விளம்பர வெளிச்சம் கொடுக்கப்பட்டது. அங்கும் உ.பி. கூத்துதான். பிரபல உணவு விடுதியிலிருந்து உணவு கொண்டு வரப்பட்டு, தாழ்த்தப்பட்டவரோடு உட்கார்ந்து உணவருந்தினார்.
பிஜேபி சங்பரிவார் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் வருணாசிரமத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்கள். தீண்டாமை க்ஷேமகரமானது என்னும் சங்கராச்சாரியாரின் அடியொற்றி நடக்கக் கூடியவர்கள் என்பது வெளிப்படை.
செத்துப் போன பசுவின் தோலை உரித்த தாழ்த்தப்பட்டவர்களைக் கொலை செய்தவர்களும் சங்பரிவார்களே. மத்தியில் உள்ள மோடி தலைமையிலான அரசின்மீது தாழ்த்தப்பட்ட மக்கள் மிகப் பெரும் அளவுக்கு வெறுப்பினைக் கொண்டுள்ளனர். இதை உணர்ந்த நிலையில் தாழ்த்தப்பட்டவர்களை தாஜா செய்யும் வேலையில் பிஜேபி இறங்கியுள்ளது. இந்த நாடகத்தனமான வேடமும் இப்பொழுது மக்கள் மத்தியில் தோலுரிந்து தோரணமாகத் தொங்குகிறது.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் தான் இந்த நாட்டின் வெகு மக்கள் ஆவர். பிஜேபிக்கு மரண அடி கொடுக்க இந்த வெகு மக்கள் தயாராகி விட்டனர் என்பது உண்மையே!