சட்ட விரோத அரசுகள்

திரிபுரா முதல் அமைச்சராக சில மாதங்களுக்கு முன் பதவியேற்றவர் பா.ஜ.க.வை சேர்ந்த பிப்லப் தேப். இவர்...

👤 Saravana Rajendran28 April 2018 4:04 PM GMT
சட்ட விரோத அரசுகள்
Share Post

திரிபுரா முதல் அமைச்சராக சில மாதங்களுக்கு முன் பதவியேற்றவர் பா.ஜ.க.வை சேர்ந்த பிப்லப் தேப். இவர் அகர்தலா நகரில் கைத்தறி பயிற்சி பட்டறை ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், "பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் பொருட்களை விற்க பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வருகின்றன. இந்தியா மிகப்பெரிய சந்தை ஆகும். ஆகவே இந்தியாவில் இருந்து தொடர்ந்து உலக அழகிகள் உருவாக்கப்பட்டார்கள். அய்ந்துபேர் உலக அழகிப் பட்டமும் பெற்றுள்ளனர். இதில் அய்ஸ் வர்யா பெற்ற உலக அழகிப் பட்டம் மட்டுமே இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும். டயானா ஹைடன் என்பவர் பெற்ற உலக அழகிப் பட்டம் அவரது அழகு தகுதிக்காக கொடுக்கப்பட்டது அல்ல, அது வேறு வகையில் அவருக்குக் கிடைத்துள்ளது. உலக அழகி பட்டம் பெறுவதற்கு அய்ஸ்வர்யா ராயிடம் மட்டுமே அழகு உள்ளது. டயானா ஹைடனை இந்தியர்கள் உலக அழகிப் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறியுள்ளார். இந்தியரான டயானா ஹைடன் 1997ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் ஆவார்
டயானா ஹைடன் குறித்த விமர்சனத்துக்கு திரிபுரா முதல்வர் பிப்லப் தேப்க்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
'முதல்வரின் இந்தக் கருத்து முட்டாள் தனமானது' என்று பெண்ணுரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். டில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஆலோசகர் நாகேந்தர் சர்மா கூறுகையில், 'திரிபுரா முதல்வரின் இந்தக் கருத்து இந்த ஆண்டின் முட்டாள்தனமானது' என சாடியுள்ளார்.
டில்லியைச் சேர்ந்த மூத்த ஆங்கிலப் பத்திரிகையாளர் ஒருவர் கூறும்போது திரிபுரா முதல்வர் நல்ல பொழுதுபோக்குவாதி; சோர்ந் திருக்கும் அரசியல் களத்தில் அவ்வப்போது நன்றாக சிரிக்கவைக்கும் செயலைச் செய்கிறார்" எனக் கூறியுள்ளார். பொது இடங்களில் பா.ஜ.க. பிரமுகர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் பேசவேண்டும் என மோடி சமீபத்தில் கூறியிருந்த நிலையில், அதனைச் சற்றும் பொருட்படுத்தாமல் திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் இவ்வாறு கூறியுள்ளார். திரிபுரா முதல்வர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சை களில் சிக்கி வருகிறார். ஏற்கனவே மகாபாரத காலத்திலேயே இணையதளம் மற்றும் வைபை போன்ற வசதிகள் இருந்ததாகவும், அதனால் தான் போர்க்களத்தில் நடந்தவற்றை பார்வை இழந்த நிலையிலும் திருதராஷ்டிரன் தன்னுடைய அரண்மனையில் இருந்து நேரடியாக பார்த்து அதன் போக்கை அறிந்துகொண்டார் என்றெல்லாம் உளறித் தள்ளியிருந்தார். இப்படி கூறி ஒருவாரம் கூட ஆகாத நிலையில், மீண்டும் ஒரு மாநில முதல் அமைச்சர் உளறுகிறார்.
ஏனிப்படிப் பேசுகிறார்? டயானா ஹைடன் கிறித்தவர், அய்ஸ்வர்யாராய் இந்து.
எதிலும் இந்து - முசுலிம் - கிறித்தவர் என்ற பார்வை ஆபத் தானது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதி காரத்திலும் இந்தக் கண்ணோட்டம் உள்ளவர்கள் இருந்தால், இந்துக்கள் அல்லா தாருக்கான பாது காப்பு எங்கே இருக்கிறது?
அப்படி என்றால் இவர்கள் இந்துக்களுக்காக மட்டுமே ஆட்சி புரிகிறார்களா? அப்படி செயல்பட சட்டம் அனுமதிக்கிறதா?
வேலியே பயிரை மேய்வது என்பார்களே - அது வேறு யாருக்கும் பொருந்துகிறதோ இல்லையோ இன்றைய பிஜேபி அரசுக்கு நூற்றுக்கு நூறு துல்லியமாகவே பொருந்தும்.
அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி கூறி பதவி ஏற்றவர்கள் அதனை மீறும் போது, அவர்கள் தங்களுக்குத் தாங்களே சட்ட விரோதிகள் ஆகி விடுகிறார்களா இல்லையா? அந்த வகையில் மத்திய பிஜேபி ஆட்சியும் சரி, பிஜேபி ஆளும் மாநிலங்களும் சரி சட்ட விரோத ஆட்சிகளே என்பதில் அய்யமில்லை.