Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » ஸ்டெர்லைட் போராட்டம் பள்ளி சிறுவர்கள் உள்ளிட்ட 200 பேர் கைது

ஸ்டெர்லைட் போராட்டம் பள்ளி சிறுவர்கள் உள்ளிட்ட 200 பேர் கைது

தமிழகத்தில் தென் மாவட்ட துறைமுக நகரமான தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், மாநில தொழில் வளர்ச்சித்துறை வளாகத்தில் அமைய உள்ள ஸ்டெர்லைக் தாமிர ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தியும், 12-ஆம் தேதி முதல் பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

👤 Saravana Rajendran14 Feb 2018 4:56 AM GMT
ஸ்டெர்லைட் போராட்டம் பள்ளி சிறுவர்கள் உள்ளிட்ட 200 பேர் கைது
Share Post

போராட்டத்தில் ஈடுபட்டு ஊர் மக்களை கலைந்துசெல்லும்படி காவல்துறையினர் கூறினர். 'இந்த் ஆலை நிர்வாகமும் அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வரை நாங்கள் இவ்விடத்தை விட்டு நகர மாட்டோம்' என ஊர்மக்கள் உறுதியாகக் கூற, காவல்துறை அனைவரையும் கைதுசெய்ய முயன்றனர்.


இதனைத்தொடர்ந்து போராட்டம் வலுப்பெற்றது. போராட்டம் வலுத்ததும், மாவட்ட துணை ஆட்சியாளர் மற்றும் மாவட்ட காவல்துறை ஆணையர் ஆகியோர் விரைந்து வந்து, ஊர்மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். 'எங்க குமரெட்டியாபுரம் கிராமத்துக்கு வந்து பாருங்க. இத்தனை நாளும் நாங்க படுற கஷ்டம் உங்களுக்குப் புரியும். பகல்லயும், இரவுலயும் இந்த ஆலை வெளியேத்துற நச்சுப்புகையால தோல் நோய் முதல் கருச்சிதைவு, புற்றுநோய் வரை இல்லாத நோய்களே இல்லை.
எங்க ஊருக்குப் போயி செத்து மடிஞ்சு இந்தப் பூங்கா பின்புறம் உள்ள மயானத்தில் அடக்கம் செய்வதைவிட, இங்கேயே செத்துப்போறோம். அரசாங்கத்துக்கு அடக்கச் செலவாவது மிச்சமாகட்டும். தாய், தகப்பன், பிள்ளைகளைப் பிரிஞ்சு போறதைவிட ஒன்னாவே செத்துடுறோம்.
குமரெட்டியாபுரம் ஊர் அழிஞ்சுட்டுன்னு வரலாறு சொல்லட்டும். எங்க ஊரை அழிச்சாவது, மொத்த தூத்துக்குடி மக்களையும் காப்பாத்துவோம். எத்தனை நாள் ஆனாலும் எங்க போராட்டம் தொடரும்' என உரத்த குரலில் பெண்கள் கூறியதும், 'அரசுக்கு உங்களோட கோரிக்கையைத் தெரிவிக்கிறோம்' என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தார்கள். இந்த நிலையில் காவல்துறையினர் பள்ளிசிறுவர் சிறுமிகள் உள்ளிட்ட 200 பேரை கைதுசெய்தனர்.
இது தொடர்பாக எனக்கு அலைபேசியில் பேட்டியளித்த குமரெட்டியாபுரம் போராட்டக்குழுவில் உள்ள கல்லூரி மாணவர் பூபதி கூறும் போது "ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் நச்சுப்புகையால் எங்கள் ஊரில் பலருக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், கருச்சிதைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் அதிகளவில் புகை வெளிவிடுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் எங்கள் மண் பாதிக்கப்படுகிறது, தண்ணீர் குடிக்கத்தகுதியற்றதாக மாறிவிட்டது. இந்த தண்ணீரைக் குடித்த ஆடு, மாடுகளும் பல நோய்களுக்கு உள்ளாகி இறந்துள்ளன. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் எங்களில் வாழ்வாதாரத்தை சிதைத்து வாழத்தகுதியற்ற நகரமாக தூத்துக்குடியை மாற்றிவருகின்றனர். இதனால் அதிகப் புற்றுநோயாளிகள் உருவாகி வரும் நகராகவும் தூத்துக்குடி மாறிவிட்டது.
இந்நிலையில், மேலும் ஒரு புதிய ஆலையை இங்கே திறக்க உள்ளனர். புதிய ஆலை ஏற்கெனவே உள்ள ஆலையை விட நான்கு மடங்கு பெரியது. மேலும் பாதிப்புகள் அதிகமாகும் னக்கள் நலனைக் கருத்தில்கொண்டு புதிய ஆலையை நிறுவ அரசு அனுமதி அளிக்கக் கூடாது. ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஆலையையும் மூடிட வேண்டும்." என்று கூறினார்.