பிரபல திரைப்பட நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே. ரித்தீஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 46. முரட்டு மீசையுடன் சினிமாவில் காலடி வைத்தபோதே புகழுடன் வந்தவர் ரித்தீஷ். சிறிது நாளில் புரட்சி நாயகன், அதிரடி மன்னன் என்று புகழ்ந்தார்கள்.
தன்னை அடையாளப்படுத்தி கொள்ள எத்தனையோ விதமான விளம்பரங்களை செய்து கொண்டாலும், கணக்குப் பார்க்காமல் அள்ளிக் கொடுப்பவர் என்ற பெயரையும் பெற்றவர்.
அரசியலிலும் இவர் கால் பதித்தார். திமுக, அதிமுக என இரண்டிலுமே உள்ளே நுழைந்து ஒரு கலக்கு கலக்கினார். 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ராமநாதபுரம் எம்பியாகவும் உயர்ந்தார் ரித்தீஷ்! அதன் பிறகு திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டதால், அவரது ஆதரவாளராக செயல்பட்டவர், பிறகு திமுக-வில் இருந்து விலகி 2014ம் ஆண்டு அதிமுக-வில் இணைந்தார்.
மக்களவைத் தேர்தலுக்காக ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ராமநாதபுரம் சென்றிருந்ததாக தெரிகிறது. இன்று அவரது வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட ரித்தீஷ் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினார்கள்.