போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ரியா சக்ரபோர்த்தியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்தனர்.
பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 14ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த விவகாரத்தில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு உள்ளதாக, சுசாந்தின் தந்தை, பீஹார் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
ரியாவிடம் நடந்த விசாரணை அடிப்படையில், அவருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதனால், அவர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) சார்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர், அவரது சகோதரர் ஷோவிக், தங்கியிருக்கும் வீட்டிலும், சுசாந்த் மேலாளர் சாமுவேல் மிராண்டா வீட்டிலும் என்சிபி அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் ஷோவிக், மிராண்டா மற்றும் சுசாந்தின் வீட்டு உதவியாளர் தீபேஷ் சாவந்த் ஆகியோரை என்.சி.பி., அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து ரியா சக்ரபோர்த்தியிடம் கடந்த ஞாயிறு மற்றும் திங்களன்று ,மும்பையில் உள்ள அலுவலகத்தில் வைத்து, என்.சி.பி., அதிகாரிகள் விசாரிணை நடத்தினர். மூன்றாவது நாளாக இன்றும் விசாரணை நடத்திய நிலையில், அவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இன்றே அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.