Home » சட்டம் & அரசியல் » கூட்டம் பெரிது, கொள்கை சிறிது-கமலுக்கு எல்லோருக்கும் நல்லவர் ஆகும் முயற்சி - சுப. வீரபாண்டியன்

கூட்டம் பெரிது, கொள்கை சிறிது-கமலுக்கு எல்லோருக்கும் நல்லவர் ஆகும் முயற்சி - சுப. வீரபாண்டியன்

உண்மைதான், கமல் அரசியலுக்கு நேரடியாய் வந்துவிட்டார். இதுவரை எனக்காக வாழ்ந்தேன், இனி எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக என்றும் அறிவித்துள்ளார்.

👤 Saravana Rajendran22 Feb 2018 4:30 AM GMT
கூட்டம் பெரிது, கொள்கை சிறிது-கமலுக்கு எல்லோருக்கும் நல்லவர் ஆகும் முயற்சி  - சுப. வீரபாண்டியன்
Share Post

கட்சியின் பெயர், கொடி, கொள்கை எல்லாம் 21 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார். பெயரும், கொடியும் தெளிவாக அறிவிக்கப்பட்டு விட்டன. கொள்கை அவ்வளவு தெளிவாகச் சொல்லப்படவில்லை. இப்போதைக்கு இது போதும், துருவித் துருவிக் கேட்பவர்களுக்கு ஒரு புத்தகமே தயாராகிக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
எனினும் கொள்கை பற்றிச் சிலவற்றை அவர் சொல்லாமலும் இல்லை.இசம்' எல்லாம் பார்த்து இப்போது மக்கள் வாக்களிப்பதில்லை, நேர்மையான நிர்வாகம் என்பதைத்தான் எதிர்பார்க்கின்றனர் என்று சந்திரபாபு நாய்டு கூறியதாகவும், அது தனக்கும் உடன்பாடு என்றும் கூறியுள்ளார். பிறகு வெளிப்படையாகவே, 'இடதா, வலதா என்று சிலர் கேட்கின்றனர். அதற்கு விடையாகவே, கட்சிக்கு மய்யம் என்று பெயர் சூட்டியுள்ளதாக விளக்கியுள்ளார். மய்யம் என்னும் சொல்லுக்கு நிறுவனம், நடுநிலை என இரு பொருள் உண்டு. இந்த மய்யம் நடுநிலையைத்தான் குறிக்கிறது என்பது தெளிவாகி விட்டது. "எல்லோருக்கும் நல்லவர்" ஆகும் முயற்சி! அதனால்தான், ஒரு கேள்விக்கு விடை அளிக்கும்போது, ஒருவர் எப்படிப் பல கடவுளை நம்புகின்றாரோ அப்படித் தனக்கு காந்தியார், அம்பேத்கார், பெரியார், காமராஜர் எல்லோரையும் பிடிக்கும் என்கிறார். அதாவது, தத்துவம் வேண்டாம், தலைவரை நம்புங்கள் என்பதே கொள்கையின் சுருக்கம். தப்பித்துக் கொள்வதற்காக, மக்கள்தான் தலைவர் என்றும், தான் வெறும் தொண்டர் என்றும் கூறிக் கொள்கிறார்.
லஞ்சத்தை எப்படி ஒழிப்பீர்கள் என்றால், நான் எப்படி ஒழிக்க முடியும், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்துதான் ஒழிக்க வேண்டும் என்பது அவரது விடையாக உள்ளது. இதைவிடப் பொத்தாம் பொதுவாக எப்படிப் பேச முடியும்? காவிரிச் சிக்கலுக்குத் தீர்வு உரையாடல் (டயலாக்) மூலம்தான் கிட்டும் என்று விடை சொல்லும் அவர், இதற்குமுன் எத்தனையோ முறை நடைபெற்றுள்ள உரையாடல்களைப் பற்றி பேசவில்லை. கர்நாடகத்திலிருந்து தண்ணீர் என்ன, ரத்தமே பெற்றுத் தருவேன் (அதாவது ரத்த தானம்) என்று உறுதி அளிக்கிறார். விவசாயத்திற்கு ரத்தம் எப்படிப் பயன்படும் என்று தெரியவில்லை. யாருக்கும் ஸ்கூட்டர் இலவசம் இல்லை. ஆனால், மற்றவர்களுக்கு நீங்கள் ஸ்கூட்டர் வாங்கி கொடுக்கும் வகையில் பொருளாதாரம் உயர்ந்து விடும் என்கிறார். அந்தக் கற்பனை சமூகத்தில் நாம் யாருக்குதான் ஸ்கூட்டர் வாங்கி கொடுப்பது? எல்லோரும்தான் பணக்காரர்கள் ஆகி விடுவார்களே?
பேசியவர்களில் ஒருவர், தில்லி மாநிலத்தின் முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி. 2015 செப்டெம்பரில் தன் மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாற்றிற்கு ஆளானவர். அவர் மீது உச்சநீதிமன்றம் கைது ஆணையும் பிறப்பித்தது. பெண்களின் உரிமை பற்றி அவரையும் மேடையில் வைத்துக் கொண்டுதான் கமல் பேச வேண்டியிருந்தது. தான் இடதும் இல்லை, வலதும் இல்லை என்று கமல் சொல்லும் போது, மேடையில் 'தோழர்' பாரதி கிருஷ்ணகுமாரைப் பார்க்க முடிந்தது. நீருக்குப் பதில் ரத்தமே பெற்றுத் தருவேன் என்று அவர் பேசிய மேடையில், விவசாயத் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியனையும் பார்க்க முடிந்தது. ஊடக வெளிச்சம் மிகப் பெரியதாக இருந்தது. முழக்கங்களும் பெரிதாகத்தான் கேட்டன. கொள்கை மட்டும்தான் மிகச் சிறியதாக இருந்தது.