Home » சட்டம் & அரசியல் » சுதந்திர இந்தியாவின் முதல் நீண்ட நெடிய போராட்டம்-இரோம் சர்மிளா

சுதந்திர இந்தியாவின் முதல் நீண்ட நெடிய போராட்டம்-இரோம் சர்மிளா

வரலாற்றில் பல போராட்டங்கள் மனித குலத்திற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டாக இருந்திருக்கின்றன. சமீபகாலத்தில் அதற்கான எடுத்துகாட்டாக உள்ள இரோம் சர்மிளா, புதிய தலைமுறைகளுக்கு ஒரு நடப்பு எடுத்துக்காட்டாக உள்ளார்

👤 Saravana Rajendran14 March 2018 11:36 PM GMT
சுதந்திர இந்தியாவின் முதல் நீண்ட நெடிய போராட்டம்-இரோம் சர்மிளா
Share Post

உண்ணாவிரதப் போராட்டம் என்பது நம் நாட்டுக்குப் புதிதான ஒன்று இல்லை. இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிகப் பெரிய ஆயுதமாக உண்ணாவிரதத்தைத்தான் காந்தியடிகள் பயன்படுத்தினார். அவருடன் லட்சக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்றனர். அதுவே நம் நாட்டை அடிமைப்படுத்தியிருந்த ஆங்கிலேயெ அரசு நாட்டை விட்டே செல்லும் முடிவை எடுக்கவைத்தது.
சுதந்திரத்திற்குப் பின்னும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க வலியுறுத்தி பலரும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இரோம் ஷர்மிளாவின் போராட்டம் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்ததற்குக் காரணம் அவர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகாலம் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்தார் என்பதே.
இந்தியா விடுதலை அடைந்த பிறகு சிற்றரசுகள் மற்றும் சமஸ்தானங்களைத் தன்னுடன் இணைத்தது. அப்படிச் சேர்க்கும்போது பல இடங்களில் பிரச்னைகள் ஏற்பட்டன. குறிப்பாக, அருணாச்சலம் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் சிக்கல் நிலவியது. அதனால் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, மற்றும் திரபுரா மாநிலங்களில் 1958-ம் ஆண்டு, சிறப்பு அதிகாரம் கொண்ட ஆயுதப் படைச் சட்டத்தை அமல்படுத்தியது. வாரன்ட் இல்லாமல் ஒருவரை விசாரிப்பது, கைது செய்துவது, எந்த இடத்திலும் தேடுதல் வேட்டையைச் செய்வது உள்பட வானாளவிய அதிகாரங்கள் அச்சட்டம் தந்தது.
அதனால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இந்தச் சட்டத்தைத் திரும்ப பெற்றுகொள்வதற்குப் பலரும் போராடினர் (இன்றும் போராடி வருகின்றனர்). அவர்களில் பலர் ஆயுத வழியை மேற்கொள்ள அகிம்சை வழியைக் கையில் எடுத்தவர் இரோம் ஷர்மிளா.
1972-ம் ஆண்டு மார்ச் 14-ம் நாளில் மணிப்பூர் மாநிலத்தில் பிறந்தவர் இரோம் ஷர்மிளா. ஐந்து சகோதரர்கள், மூன்று சகோதரிகள் எனப் பெரிய குடும்பம் இரோம் ஷர்மிளாவுடையது. பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டும்தான் படிக்கும் சூழல். ஆயினும் மனித உரிமைத் தொடர்பாகப் படிப்பதில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டு.
2000-ம் ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி மணிப்பூர் மாநிலம், மலோம் எனும் ஊரில் பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள்மீது எந்தக் காரணமுமின்றி இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. அதில் 10 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். தாங்க முடியாத துயரம் என்னவென்றால், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசிய வீரக்குழந்தை எனும் பட்டத்தைப் பெற்ற சீனம் சந்திரமணி எனும் சிறுமியும் இறந்தவர்களில் ஒருவர். அந்தச் சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கி எடுத்துவிட்டது. அந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சிறப்புச் சட்டத்தைக் காரணமாகக் காட்டித் தப்பித்துக்கொண்டனர்.
மலோம் துயரச் சம்பவம் இரோம் ஷர்மிளாவை ரொம்பவே பாதித்தது. அப்போது அவருக்கு வயது 28. அந்தச் சம்பவம் நடந்த நான்காம் நாள் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் இரோம் ஷர்மிளா. அதைப் பார்த்து பலரும் கிண்டல் செய்தனர். ஆனால், அவர் தனது போராட்டத்தைக் கைவிடவில்லை. அவரின் உறுதியைக் கண்டு அஞ்சிய அரசு, இரோம் தற்கொலைக்கு முயல்வதாகக் கூறி, நவம்பர் 6-ந்தேதி கைது செய்தது. ஆனால், அவர் அப்போதும் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். அதனால் மருத்துவமனையில் மருந்துகள் வழியாக உணவூட்டப்பட்டன. இந்தச் செய்தி நாடெங்கும் பரவியது. மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள், அறிஞர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆயுதப்படைச் சட்டத்தை விலக்கிக்கொள்ளும்வரை தனது போராட்டத்தைத் தொடர்வது என இரோம் ஷர்மிளா முடிவெடுத்தார். நோபல் பரிசு பெற்ற இபடி யின் வாழ்த்தில் தொடங்கி மனித உரிமை பரிசு வழங்குவது என்பதாக உலகம் தழுவிய ஆதரவு அவருக்குக் கிடைத்தது. முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அவர், இடையில் கிடைத்த சிறு விடுவிப்பில் டெல்லிக்கே சென்று, காந்தியின் சமாதிக்கு மரியாதை செலுத்தி, அன்றே தனது போராட்டத்தைத் தொடர்ந்தார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் நீடித்த இந்தப் போராட்டத்தை 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடித்துக்கொண்டார். தனது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை வடிவத்தை மட்டும்தான் மாற்றப்போவதாகக் கூறினார்.
2017-ம் நடந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் தோபல் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், மிகச் சொற்பமான வாக்குகளையே அவரால் பெற முடிந்தது. இந்தத் தோல்வி அவரை மட்டுமல்ல, அவரை ஆதரித்த பலருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது. அதன்பின், அரசியலிலிருந்து விலகி, தமிழ்நாட்டுக்கு வந்து, தனக்கு விருப்பமானவரைத் திருமணம் செய்துகொண்டு அமைதியான வாழ்க்கையை அவர் வாழ்ந்துவருகிறார்.
ஒரு போராட்டத்தின்போது ஒருவர் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கு இரோம் ஷர்மிளாவே மிகச் சரியான உதாரணம். அவ்வழியை இந்திய மக்களுக்குத் தன் வாழ்வின் அடையாளமாக மாற்றிக் காட்டியுள்ளார். சமுக மாற்றத்தை விரும்பும் எல்லோரும், இரோம் ஷர்மிளாவின் மன உறுதியை எடுத்துக்காட்டாக கொள்ளவேண்டும்.