காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா தான், லண்டல் உள்ள பங்களாவின் உண்மையான உரிமையாளர் என அமலாக்கத்துறை அதிகாரிகள் டில்லி கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2009 ம் ஆண்டு ஆயுத வியாபாரியான சஞ்சய் பண்டாரியிடமிருந்து ஆடம்பர மாளிகையை வாங்கியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விவகாரத்தில், வத்ராவின் உதவியாளரான மனோஜ் அரோரா மீதும் புகார் கூறப்பட்டது.
இதனால் டில்லியில் உள்ள அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால், அவர் தலைமறைவானார். தொடர்ந்து, கறுப்பு பணச்சட்டத்தின் கீழ், மனோஜ் அரோராவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும் எனக்கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் டில்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த பங்களாவை, தலைமறைவாக உள்ள ஆயுத தரகர் சஞ்சய் பண்டாரி, ரூ.15 கோடிக்கு வாங்கி, ரூ.52 லட்சத்திற்கு புனரமைப்பு பணிகளை மேற்கொண்டார். பின்னர், பழைய விலைக்கே வத்ரா கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார். இந்த நடவடிக்கையே, இந்த கட்டடத்திற்கு சஞ்சய் பண்டாரி, உரிமையாளர் அல்ல. ராபர்ட் வாத்ரா தான் உண்மையான உரிமையாளர் என தெரியவருகிறது . தற்போது, இந்த வீட்டை நிர்வகித்து வரும் வத்ரா, அதனை புனரமைத்து வருவதுடன், அதற்கான செலவுகளையும் செய்கிறார் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை வரும் செவ்வாய்க்கிழமை(ஜனவரி 8)ம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
குறிப்பிட்ட காலக்கெடு இல்லாமல், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கும் வகையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம், மனோஜ் அரோராவுக்கு எதிராக இண்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கவும் முயற்சிகள் நடக்கிறது.