Home » சட்டம் & அரசியல் » விமானக் கண்காட்சியின் போது கார்கள் தீப்பிடித்ததற்கான காரணம் என்ன?

விமானக் கண்காட்சியின் போது கார்கள் தீப்பிடித்ததற்கான காரணம் என்ன?

ஒரு காரின் 'சைலன்சர்' மிகவும் சூடாக இருந்ததே காரணம்' என, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

👤 Sivasankaran25 Feb 2019 12:49 PM GMT
விமானக் கண்காட்சியின் போது கார்கள் தீப்பிடித்ததற்கான காரணம் என்ன?
Share Post

பெங்களூரில் நடந்த விமானக் கண்காட்சியின் போது, 277 கார்கள் எரிந்ததற்கு, ஒரு காரின் 'சைலன்சர்' மிகவும் சூடாக இருந்ததே காரணம்' என, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஏலஹங்கா விமானப் படை தளத்தில், 'ஏரோ இந்தியா' எனப்படும் விமானக் கண்காட்சி நடந்தது.கண்காட்சி துவங்குவதற்கு முதல் நாள், பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதியதில், ஒரு பைலட் உயிரிழந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம், வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 277 கார்கள் எரிந்தன.

இது தொடர்பாக விசாரணை நடத்த, ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, நிர்மலா சீதாராமன், நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

'வாகன நிறுத்துமிடத்தில் இருந்து ஒரு காரின் சைலன்சர் மிகவும் சூடாக இருந்துள்ளது. பலத்த காற்று வீசியதில், அதில் தீப்பற்றியதுடன், அருகில் உள்ள வாகனங்களுக்கும் பரவியுள்ளது' என, அமைச்சரிடம், அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

'அணைக்காமல் வீசப்பட்ட சிகரெட்டால், இந்த விபத்து நடந்திருக்கலாம்' என, முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட காரின் உரிமையாளர்கள், காப்பீடு பெறுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, பெங்களூரு போலீஸ், தனியாக உதவி மையங்களை அமைத்துள்ளது. அதேபோல், இன்சூரன்ஸ் நிறுவனங்களும், ஆய்வு செய்வதற்கு, வசதி செய்து தரப்பட்டுள்ளது.