கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கீழ் அனுப்பம்பட்டைச் சேர்ந்த 75 வயதான கோவிந்தராஜுவுக்கு 4 மகன்கள் உள்ளனர். இவர்களில் முதல் 3 மகன்கள் தந்தையை கண்டுகொள்ளாத நிலையில், கடைசி மகனான நித்தியானந்தம் வெளிநாட்டில் வேலை செய்தவாறு தந்தைக்கு பணம் அனுப்பி கவனித்து வந்திருக்கிறார்.
மகன் அனுப்பிய பணத்தில் வீடு ஒன்றை கட்டி, அதனை நித்தியானந்தம் பெயருக்கு எழுதி வைத்ததாகக் கூறுகிறார் கோவிந்தராஜ். அந்த வீட்டை முதல் மகனான சுகுமாரும், 3வது மகனான ரெங்கநாதனும் அபகரித்துக்கொண்டு தன்னையும் நித்தியானந்தத்தின் மனைவி, பிள்ளைகளையும் அடித்து விரட்டிவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
வீட்டை விட்டு வெளியேறிய கோவிந்தராஜ், தனியாக வந்து கிள்ளை ரயில்நிலைய பிளாட்பாரத்தில் தஞ்சமடைந்திருக்கிறார். குடிபோதையில் அங்கு வந்த மகன்கள் இருவரும் வீட்டை முறைப்படி தங்கள் பெயருக்கு எழுதி வைக்குமாறு கூறி அவரை கொடூரமாக தாக்கி துன்புறுத்தி உள்ளார்கள். இது குறித்தும் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு வந்துள்ளார்.
தனது வீட்டை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி தீக்குளிக்க வந்தவரை மீட்டு மாவட்ட ஆட்சியரிடம் அவரின் மனுவினை போலீசார் அளித்துள்ளனர்.