கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த பெரும்பான்மையான மக்கள், தற்போது நம்பிக்கையிழந்து வருகின்றனர் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு எம்சிசி உடன்பாடே பிரதான காரணியாக இருந்தது என்று கூறினார்.
அப்போது எம்சிசி போன்ற நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உடன்பாடுகளை நிராகரிப்பதாக கோத்தாபய ராஜபக்ச வழங்கிய வாக்குறுதியை பெரும்பான்மையான மக்கள் நம்பினார்கள் என்றும் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்தார்.
ஆனால், கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த பெரும்பான்மையான மக்கள் தற்போது நம்பிக்கையிழந்து வருகின்றனர் என்றும், எம்சிசி உடன்பாட்டை கிழித்தெறியும் என எதிர்பார்க்கப்பட்ட தற்போதைய அரசாங்கம், அந்த உடன்பாட்டில் கைச்சாத்திடுவதற்கு, வழியமைத்து வருகிறது என்றும், அவர் குற்றம்சாட்டினார்.
இந்த உடன்பாட்டில் கைச்சாத்திடுவதற்கான பணிகளை அமெரிக்க தூதரகம் ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அத்துரலியே ரத்தன தேரர், தொடர்ந்தும் பொய்களைக் கூறாமல், எம்சிசி உடன்பாடு கைச்சாத்திடப்படுமா இல்லையா என்பதை, பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.