காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் பதவியில் இருந்து, வழக்கறிஞர் சாலிய பீரிஸ் விலகியுள்ளார்.
எதிர்வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் தாம், பதவி விலகியுள்ளதாக சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தினால், நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளின் ஒரு அங்கமாக, 2018ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான பணியகத்தின் முதல் தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
சிறிலங்கா வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள சாலிய பீரிஸ், அதற்கான பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு வசதியாகவே காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.