அமெரிக்காவுக்கான தூதுவராக ரவிநாத் ஆரியசிங்க நியமிக்கப்படவுள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டுக்கான தூதுவராக நியமிக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் தூதுவராக கடமையாற்றிய ரொட்னி பெர்னாண்டோ சிறிலங்காவுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை நீண்டகாலமாக வெற்றிடமாக இருந்து வரும் பிரான்ஸ் நாட்டுக்கான சிறிலங்கா தூதுவராக பேராசிரியர் க்ஷனிகா ஹிரிம்புரேகம நியமிக்கப்படவுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான இவர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
அத்துடன் இந்தியாவுக்கான சிறிலங்கா உயர் ஸ்தானிகர் பதவிக்கு ஏற்கனவே முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர இத்தாலி, தென் கொரியா, சீசெல்ஸ், ஈரான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கான தூதுவர் பதவிகள் வெற்றிடமாக இருந்து வருகின்றன. அந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.