Home » சட்டம் & அரசியல் » சிறிலங்காவில் சட்ட திருத்தத்துக்கு ஆளும் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு

சிறிலங்காவில் சட்ட திருத்தத்துக்கு ஆளும் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு

மகிந்தவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சேவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கான, 20வது திருத்தச் சட்டம் பற்றிய அறிவிப்பு, அரசிதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

👤 Sivasankaran14 Sep 2020 9:58 AM GMT
சிறிலங்காவில் சட்ட திருத்தத்துக்கு ஆளும் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு
Share Post

அதிபருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்துக்கு, ஆளும் இலங்கை மக்கள் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதை மறு ஆய்வு செய்வதற்காக ஒன்பது அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் கட்சி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. மகிந்த, பிரதமராக பதவியேற்றார். இதையடுத்து, அதிபராக பதவி வகிப்பவரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், 2015ல் நிறைவேற்றப்பட்ட, 19வது சட்ட திருத்தத்துக்கு பதிலாக, 20வது திருத்த சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதன்படி, அதிபரும், மகிந்தவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சேவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கான, 20வது திருத்தச் சட்டம் பற்றிய அறிவிப்பு, அரசிதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த சட்ட திருத்தத்தில், 'இலங்கை அதிபர் விரும்பினால், நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம். பிரதமர், அமைச்சர்களை, அதிபர் பதவி நீக்கம் செய்ய முடியும்.அதிபருக்கு எதிராக விசாரணை நடத்த, யாரும் உத்தரவிட முடியாது' என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து, இந்த வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, விவாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், பிரதமர் மகிந்தவின் ஆதரவாளர்களும், இலங்கை ஆளும் கட்சியின் குறிப்பிட்ட சில எம்.பி.,க்களும், இந்தச் சட்டத் திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், பிரதமரின் அதிகாரம் குறைக்கப்படும். அதிபரால், அவரது பதவி பறிக்கப்படலாம். இதில் திருத்தம் செய்ய வேண்டும்' என, அவர்கள் கூறினர். இதையடுத்து, இந்தச் சட்டத் திருத்தம் குறித்து மறு ஆய்வு செய்து, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள, ஒன்பது அமைச்சர்கள் அடங்கிய குழுவைப் பிரதமர் மகிந்த நியமித்துள்ளார்.