
கடந்த வாரம் தாய்வானின் தென்மேற்கு கடற்கரையில் சீன இராணுவம் மேற்கொண்ட பயிற்சிகள் சீனாவின் இறையாண்மையைப் பாதுகாக்க ஒரு தேவையான நடவடிக்கை என பெய்ஜிங் நேற்று (புதன்கிழமை) கூறியுள்ளது.
சீனாவின் பெரிய அளவிலான வான் மற்றும் கடற்படைப் பயிற்சிகள் கடுமையான ஆத்திரமூட்டல் நடவடிக்கை என தாய்வான் குற்றம் சாட்டியிருந்த நிலையில் சீனா இவ்வாறு பதிலளித்துள்ளது.
ஜனநாயக தாய்வானை தனது சொந்தமாகக் கூறும் சீனா, தீவின் அருகே இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது, அத்தோடு சீன ஆட்சியை ஏற்பதை கட்டாயப்படுத்துவதற்கே இவ்வாறான மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தாய்வான் கருதுகிறது.
தாய்வானின் பிரதான நிலப்பரப்பு மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிரதஸ் தீவுகளுக்கும் இடையில், வான் பரப்பில் கடந்த வாரம் இடம்பெற்ற இரண்டு நாள் பயிற்சிகளுக்கு தாய்வான் கண்டனம் தெரிவித்தது.
இந்த பயிற்சிகளுக்கு விளக்கத்தை அளித்த சீனாவின் தாய்வான் விவகார அலுவலகத்தின் ஊடக பேச்சாளர் மா சியோகுவாங், தாய்வான் சீனாவின் புனிதமான மற்றும் பிரிக்க முடியாத பகுதி எனக் கூறினார்.
மக்கள் விடுதலை இராணுவத்தின் தொடர்புடைய போர் பயிற்சி நடவடிக்கைகள், தாய்வான் நீரிணை மற்றும் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு அவசியமான நடவடிக்கையாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடுத்து அதிகரித்து வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக தற்செயலான மோதல் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்த தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், இந்த தீவு ஏற்கனவே சீன குடியரசு என்று அழைக்கப்படும் ஒரு சுதந்திர நாடு என்றும் இது தாய்வான் என அழைக்கப்படுவதாகவும் கூறினார்.
பென்டகன் கடந்த வாரம் சீனாவின் பயிற்சிகளைப் பற்றியும் கவலை தெரிவித்தது. தாய்வான் கடல் வழியாக வழக்கமான போர்க்கப்பல் பயணம் உட்பட அமெரிக்கா தாய்வானுக்கு அருகே தனது சொந்த இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.