Home » சட்டம் & அரசியல் » ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை: அமெரிக்கா உறுதி

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை: அமெரிக்கா உறுதி

அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

👤 Sivasankaran17 Sep 2020 12:38 PM GMT
ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை: அமெரிக்கா உறுதி
Share Post

'ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படும்' என, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே 2018ல் போர்ச் சூழல் மூண்டது. கடந்த ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது. அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் நவ., மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன், தென் ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, 'அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ''ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் அமல்படுத்தும். ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயலும். மத்திய கிழக்குப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா செய்யும்,'' எனத் தெரிவித்துள்ளார்.