
விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டில் இல்லாதொழிக்கபபட்டாலும் அவர்களின் பிரிவினைவாத கொள்கை உலகம் முழுவதும் வியாபித்துள்ளது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை பிரிவினைவாத கொள்கையை செயற்படுத்த பயன்படுத்திக் கொள்வார்கள். ஆகவே இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திருத்தத்தில் இரட்டைக்குடியுரிமையினை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் நாட்டில் இல்லாதொழிக்கப்பட்டாலும் அவர்களின் பிரிவினைவாதக் கொள்கை உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் பங்குபற்ற முடியும் என்பதை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நிச்சயம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
சீனர்கள், இந்தியர்கள், ஆகியோர் எதிர்காலத்தில் சிறிலங்கா நாடாளுமன்றில் உறுப்பினராக செயற்படுவார்கள் என்பதில் எவ்வித ஆச்சரியமும் கிடையாது. ஆகவே அரசாங்கம் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.