Home » சட்டம் & அரசியல் » தொடரும் நெருக்கடியால் திணறும் டிரம்ப் பிரசார குழு

தொடரும் நெருக்கடியால் திணறும் டிரம்ப் பிரசார குழு

பல்வேறு இடங்களில் பிரசாரத்துக்கு நிதி திரட்டும் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

👤 Sivasankaran6 Oct 2020 8:57 AM GMT
தொடரும் நெருக்கடியால் திணறும் டிரம்ப் பிரசார குழு
Share Post

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில் சிக்கல் மேல் சிக்கல்களால் அதிபர் டிரம்பின் பிரசாரக் குழு திணறி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு டிரம்புக்கு ஏற்பட்டுள்ளதும் பிரசாரக் குழுவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மிக விரைவில் அவர் குணமடைந்து திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அவரால் உடனடியாக பிரசாரத்தில் ஈடுபட முடியாது. அடுத்த சில நாட்களில் பல்வேறு இடங்களில் பிரசாரத்துக்கு நிதி திரட்டும் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தற்போது அவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் போதிய நிதி இல்லாமல் பிரசாரக் குழு தள்ளாடுகிறது. வைரஸ் குறித்து அலட்சியமாக பேசி வந்த டிரம்புக்கு தற்போது வைரஸ் தொற்றியுள்ளது. அதனால் மக்கள் மனதில் புதிய பயம் ஏற்பட்டுள்ளது. இது டிரம்புக்கு எதிராக திரும்பும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஆனால் டிரம்பின் பிரசாரக் குழு மேலாளர் உட்பட அவருடன் நெருக்கமாக பழகிய பலருக்கும் வைரஸ் உறுதியாகி உள்ளது. அதனால் முழு வீச்சில் பிரசாரம் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் டிரம்பின் குடும்பத்தார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகக் கூறியுள்ளனர். டிரம்புடன் நெருக்கமாக இருந்த இவர்கள் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.