
அஜர்பைஜான் மற்றும் அர்மீனிய படைகளுக்கு இடையே நடந்து வந்த போர் ரஷ்யாவின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது.
கடந்த 1991ல் சோவியத் யூனியனில் அங்கம் வகித்த அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா தனித் தனி நாடுகளாக பிரிந்தன. இருநாட்டு எல்லைப் பகுதியில் உள்ள 'நகோர்னோ - காராபாக்' என்ற பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கொண்டாடின. இது இரு நாடுகளுக்கும் இடையில் போரில் சென்று முடிந்தது. போருக்கு முடிவில் சர்ச்சைக்குரிய நகோர்னோ - -காராபாக் பிராந்தியத்தை அர்மீனிய படைகள் கைப்பற்றின. அங்கு தன்னாட்சி அதிகாரம் உடைய அரசு ஆட்சி நடத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த மாத இறுதியில் நகோர்னோ - காராபாக் பிரச்னைக்காக அஜர்பைஜான் மற்றும் அர்மீனிய படைகளுக்கு இடையே மீண்டும் பயங்கர மோதல் வெடித்தது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பை ஏற்று மாஸ்கோவில் அர்மீனிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஆர்மென் சார்கிசியன் சோஹ்ராப் மனாட்சகன்யன் மற்றும் அஜர்பைஜான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஹுன் பேராமோ இடையில் பேச்சு நடந்தது.
இதில் மத்தியஸ்தம் செய்வதற்காக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்றார். 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த பேச்சின் முடிவில் இருநாட்டு அமைச்சர்களுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் அஜர்பைஜான் மற்றும் அர்மீனிய படைகளுக்கு இடையே இரண்டு வாரங்களாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்தது.