Home » சட்டம் & அரசியல் » தமிழ்க் கட்சிகள் இணைந்து செயற்பட மீண்டும் ஆலோசனை

தமிழ்க் கட்சிகள் இணைந்து செயற்பட மீண்டும் ஆலோசனை

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவியான அனந்தி சசிதரன் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

👤 Sivasankaran17 Oct 2020 4:28 PM GMT
தமிழ்க் கட்சிகள் இணைந்து செயற்பட மீண்டும் ஆலோசனை
Share Post

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவின் அழைப்பின் பேரில், இன்று காலை 10.30 மணியளவில், நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் இந்தக் கூட்டம் ஆரம்பமானது.

இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளது. அதேவேளை, கூட்டம் தொடங்கிய போது, நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன் அதில் பங்கேற்க வந்ததால், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவியான அனந்தி சசிதரன் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

இன்றைய கூட்டத்தில், மாவை சேனாதிராசா, சிவிகே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா, அருந்தவபாலன், சரவணபவன் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

20 ஆவது திருத்தச் சட்டம், நில ஆக்கிரமிப்புகள், கூட்டாக இணைந்து பிரச்சினைகளை எதிர்கொள்வது, ஒன்றிணைந்து செயற்படுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது.

தமிழ்க் கட்சிகள் ஒன்றாக இணைந்து செயற்படுவதற்கான ஒழுங்குகள் குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் 1ஆம் திகதி நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.