Home » சட்டம் & அரசியல் » பன்னாட்டு விசாரணைக்குள் நாட்டை சிக்க வைக்காதீர்! ரஞ்சித் மத்தும பண்டார

பன்னாட்டு விசாரணைக்குள் நாட்டை சிக்க வைக்காதீர்! ரஞ்சித் மத்தும பண்டார

கால அவகாசம் கேட்டாவது தீர்மானங்களின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும்.

👤 Sivasankaran4 Jan 2021 4:47 AM GMT
பன்னாட்டு விசாரணைக்குள் நாட்டை சிக்க வைக்காதீர்! ரஞ்சித் மத்தும பண்டார
Share Post

வீர வசனங்கள் பேசி பன்னாட்டு விசாரணைப் பொறிக்குள் சிறிலங்காவைச் சிக்கவைக்க வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக சிறிலங்கா இருப்பதால் அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்களை உதாசீனம் செய்யாத வகையில் அரசு நடக்க வேண்டும்.

தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விலகியமை மிகவும் தவறான நடவடிக்கையாகும்.

கால அவகாசம் கேட்டாவது தீர்மானங்களின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும்.

அதைவிடுத்து தீர்மானங்களை உதாசீனம் செய்தமையால் மேலும் பல நெருக்குவாரங்களை சிறிலங்கா சந்திக்க வேண்டி வந்துள்ளது.

அதன் ஓர் கட்டமாக இம்முறை புதிய பிரேரணை ஒன்றை சிறிலங்கா சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அந்தப் பிரேரணை மிகவும் வலுமிக்கதாக இருக்கும் என்று தமிழ்த் தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், போர்க்குற்ற விவகாரத்தை அரசு தூக்கிப் பிடிக்க ஆரம்பித்துள்ளது. போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு சாதுரியமாக ஈடுபட வேண்டும்.

அதைவிடுத்து பகிரங்கமாக ஐ.நாவுடன் அரசு மோதினால் ஆபத்து பேராபத்தாக மாறக்கூடும். அது எமது நாட்டை உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்திவிடும்.

எனவே, வீர வசனங்கள் பேசி பன்னாட்டு விசாரணைப் பொறிக்குள் சிறிலங்காவைச் சிக்கவைக்க வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.