இச்சந்திப்பு குறித்து கமலகாசன் கூறியதாவது, "நான் இங்கு வருவது முதல்முறையல்ல. நான் செல்லும் பாதை எவ்வாறானது, என்பதை அவருக்கு தெரியப்படுத்தவே இங்கு வந்தேன். கலைஞர் கருணாநிதியை பார்த்து அறிவுக்கூர்மை, தமிழ், மக்கள் மீது உள்ள அக்கறை போன்றவற்றை கற்றுக்கொள்கிறேன். நான் மக்களுக்கு சேவைசெய்ய வந்துள்ளேன். தமிழக அரசியலை புரட்டிப்போடவோ அல்லது பரபரப்பை ஏற்படுத்தவோ வேறு எதற்காகவும் வரவில்லை. இதற்கு மக்கள்தான் மகிழ்ச்சியடைய வேண்டும். என்னுடைய கொள்கைகள் தொடர்பாக நீங்கள் வரும் 21ம் தேதி தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு கமலகாசன் கூறினார்
இதற்கு முன்பு கமலகாசன் ரஜினியைச் சந்தித்தார்
ரஜினிகாந்தின் வீட்டுக்குச் சென்ற கமலகாசன் தனது மதுரை பொதுக்கூட்டம் குறித்து அவரிடம் பேசி அவரையும் பொதுக்கூட்டத்திற்கு வர அழைப்பு விடுத்தார்.
கமலகாசனை சந்தித்துவிட்டு அவரை வழிஅனுப்பி வைத்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது "என் நண்பர் கமலகாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். அதற்கான அழைப்பிதழை எனக்கு கொடுக்க வந்தார். நான் எனது மனமார்ந்த வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்தேன்.
எல்லோருக்கும் தெரியும், நண்பர் கமல்ஹாசன் பெயருக்காகவோ, பணத்துக்காகவோ, பதவிக்காகவோ அரசியலுக்கு வரவில்லை. தமிழக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும், தமிழக மக்களை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். ஆண்டவனின் நல்ல ஆசீர்வாதம் அவருக்கு கிடைக்கவேண்டும். அதற்காக ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். அவரது எல்லா பயணத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். சினிமாவிலேயே என்னுடைய பாணி வேறு, நண்பர் கமல்ஹாசன் பாணி வேறு. அப்படியே அரசியலிலும் என்னுடைய பாணி வேறாக இருக்கும், அவருடைய பாணி வேறாக இருக்கும். ஆனால் மக்களுக்கு நல்லது செய்றது ஒன்று தான் எங்களுடைய முக்கிய நோக்கம். என்று கூறினார்.