Home » சட்டம் & அரசியல் » கர்நாடக தேர்தலுக்குப் பிறகு பாஜகவிற்குள் கிளம்பப்போகும் எதிர்ப்பலை

கர்நாடக தேர்தலுக்குப் பிறகு பாஜகவிற்குள் கிளம்பப்போகும் எதிர்ப்பலை

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றால் பாரதிய ஜனதா கட்சிக்குள் சுனாமியைப் போல கலகக் குரல் வெடிக்கக் கூடும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியான முன்னாள் மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.

👤 Saravana Rajendran12 April 2018 6:31 AM GMT
கர்நாடக தேர்தலுக்குப் பிறகு பாஜகவிற்குள் கிளம்பப்போகும் எதிர்ப்பலை
Share Post

தி இண்டியன் எக்ஸ்பிரஸில் தினேஷ் திரிவேதி எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது: 1977-ம் ஆண்டு தேர்தலில் வலிமை வாய்ந்த இந்திரா காந்தியை ராஜ் நாராயண் தோற்கடித்தார். அப்போது மொராஜி தேசாய் தலைமையில் முதலாவது காங்கிரஸ் அல்லாத ஜனதா தள் அரசு அமைந்தது. ஜெகஜீவன் ராம், வாஜ்பாய், சரண் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ் என பல தலைவர்கள் இணைந்து அந்த அரசை உருவாக்கினார்கள். ஆனால் 2 ஆண்டுகள் மட்டும்தான் ஆட்சி நீடித்தது
அதன் பிற்கு சரண்சிங் தலைமையில் 170 நாட்கள் ஆட்சி நடைபெற்றது. ஆனால் 1980-ம் ஆண்டு தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் விஸ்வரூபமெடுத்தார். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 350 இடங்கள் கிடைத்தன. ஜனதா கட்சிக்கு 31 இடங்கள்தான் கிடைத்தன. இதேபோல 1989-ம் ஆண்டு ஊழல் எதிர்ப்பை முன்வைத்து காங்கிரஸுக்கு எதிராக வி.பி.சிங் கலகக் குரல் எழுப்பினார். அப்போது தேவிலால், முப்தி முகமது சயீத், ஆரிப் முகமது கான், ஜார்ஜ் பெர்னாண்டஸ், உபேந்திரா, குஜ்ரால் என ஜாம்பவான்கள் அந்த அரசில் இருந்தனர்., ஆனால் இந்த அரசும் நீடிக்கவில்லை. 2011-ம் ஆண்டு யாருமே நினைத்துப் பார்க்க முடியாத சூழலில் மேற்கு வங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் இடதுசாரி அரசை மமதா பானர்ஜி வீழ்த்தினார். புத்ததேவ் பட்டாச்சாரியா சொந்த தொகுதியிலேயே தமது மாஜி தலைமை செயலாளரிடமே தோற்றுப் போன சரித்திரம் நிகழ்ந்தது
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஊழல் எதிர்ப்பு கோஷத்தை முன்வைத்து நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றது. அடுத்த 15 ஆண்டுகளுக்கும் பாஜக ஆட்சிதான் என பேசப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகளில் மக்களின் மனநிலை மாறி இருக்கிறது. குஜராத் சட்டசபை தேர்தல், ராஜஸ்தான் - மத்திய பிரதேச இடைத்தேர்தல்கள், உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், புல்பூர் தேர்தல் முடிவுகள் இதைத்தான் வெளிப்படுத்துகின்றன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை மத்திய பாஜக அரசாங்கத்தால் நடத்தக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்குதேசம், சிவசேனா, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அகாலிதளம் என பாஜகவுக்கு எதிராக கட்சிகள் வரிந்து கட்டுகின்றன.
எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகச் செய்யும் முயற்சியால் பாஜகவின் தாழ்த்தப்பட்ட எம்.பி.க்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். நாட்டின் தற்போதைய சூழ்நிலையானது 1977 மற்றும் 1989 ஆம் ஆண்டு அரசியல் நிலைமைகளை அப்படியே பிரதிபலிக்கிறது. அடுத்தது யார்? யாருடைய தலைமையில் எதிர்க்கட்சிகள் அணிசேரும்? என்கிற பேச்சுகள் இப்போது எழுந்திருக்கின்றன. 1989-ம் ஆண்டு தேசத்துக்காக எங்களது இதயங்கள் துடிக்கின்றன என்கிற பிரசாரத்தை காங்கிரஸ் முன்வைத்தது. தற்போது அதே தேசப்பற்று முழக்கத்தை பாஜக முன்வைக்கிறது. தேர்தல் முடிவுகளை யாரும் கணித்துவிட முடியாது. எதிர்கால இந்திய அரசியல் எப்படி என்பதையும் கணிக்க முடியாது. ஆனால் தற்போதைய அரசியல் களம் அந்த 1977 மற்றும் 1989-ம் ஆண்டைத்தான் நினைவூட்டுகின்றன. கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றுவிட்டால் பாஜகவில் கலகக் குரல் அதிகரிக்கும் இந்த எதிர்ப்பில் பாஜக மூட்டை பிரித்துவிடப்பட்ட நெல்லிக்காய் போல் சிதறிவிடும்