Home » சட்டம் & அரசியல் » மோடியின் பார்வைக்கு எங்களின் கோரிக்கை

மோடியின் பார்வைக்கு எங்களின் கோரிக்கை

"சித்திரைத்திருநாளை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன்" என்று மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

👤 Saravana Rajendran15 April 2018 1:55 AM GMT
மோடியின் பார்வைக்கு எங்களின் கோரிக்கை
Share Post

இதை எப்படிப் பார்ப்பது என்றால் இரண்டாம்தரமாக வாக்குப்பட்ட தாயின் மீது அதீக மோகம் கொண்ட தந்தை அடித்தால் காப்பாற்ற இரண்டாம் தர தாயைக் கூப்பிடுவதா அல்லது தந்தையை கூப்பிடுவதா என்ற குழப்பத்தில் உள்ள சிறுவனின் மனநிலைதான் இன்று தமிழக மக்களின் நிலை
தமிழர்களின் விருப்பங்களையுயம், தேவைகளையும் செய்துமுடிக்க வேண்டியவரே, வேண்டுதல் என்று வைத்தால் யாரிடம்தான் தமிழர்கள் சென்று இவற்றை நிறைவேற்ற கேட்க முடியும்
தமிழர்களுக்கு உள்ள விருப்பங்களும், விழைவுகளும் என்னவென்று தெரியாமல் சர்வ வல்லமை வாய்ந்த மோடி மூடி சூட்டிக்கொண்டிருக்க முடியாது. இருந்தாலும், மோடியின் கவனத்திற்கு வராமல் இருந்திருந்தால் சில நினைவூட்டல்களை தெரிவிப்பது நமது கடமையல்லவா. அதை சொல்லிவிடுவோம்.
தமிழர்களின் நீண்ட கால விருப்பமாக இருப்பது கூடங்குளம் அணு உலையை நிறுவ கூடாது என்பதுதான். இதற்காக சுற்றுவட்டார மக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை ஒருங்கிணைத்த சுப.உதயகுமாருக்கு தேசத்துரோகி முத்திரை குத்தப்பட்டது.
ஆனால் இதுவரை அவர் மீதான எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்கவும் இல்லை. ஆளுமையை சீர்குலைப்பதே இக்குற்றச்சாட்டுகளின் நோக்கம். ஆனால், சுற்றுவட்டார மக்களோ, அணு உலை ஆபத்தால் தினமும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுள்ளனர்.
மற்றொரு நீண்டகால மற்றும் அத்தியாவசிய பிரச்சினை, காவிரி நதிநீர் பங்கீடு. நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு பிறகு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும்கூட, விடிவுகாலம் பிறக்காமல் உள்ளது. அமைக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்களோ அசைவதாகவோ, வாய் திறப்பதாகவோ தெரியவில்லை
நியூட்ரினோ திட்டம் பிரச்சினைகளில் புதிதாக இணைந்துள்ளது நியூட்ரினோ திட்டம். அணு கழிவு என்ற பீதிகளை தாண்டி, இதற்காக செலவிடப்பட உள்ள நீரின் அளவை எண்ணிப் பார்த்தாலே அச்சம் அதிகரிக்கிறது. வைகோ நடை பயணத்தில் தொண்டர் தீக்குளித்து உயிரை மாய்த்தார். இருப்பினும், இன்னும் மத்திய அரசு வாய் திறக்கவில்லை
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது மக்களின் ஒருமித்த கருத்தொற்றுமை போராட்டமாக உள்ளது. மக்கள் பெருந்திரளாக போராட்டங்களை அகிம்சை முறையில் தொடர்ந்து பல நாட்கள் முன்னெடுத்தபோதிலும் கூட இன்னும் திட்டத்தை கைவிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
இலங்கை கடற்படையால் நமது நாட்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் கைது செய்யப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும் என்று விழையாத தமிழர்கள் உண்டோ? கல்வியை சீரழிக்க புதிதாக சேர்ந்துள்ளதுதான் நீட் நுழைவு தேர்வு. கடந்த ஆண்டிலேயே இதை தடுக்க வலுவாக கோரிக்கை எழுப்பப்பட்டும், அதை செய்யாததால் அப்பாவி அனிதா உயிர் பறிபோனது. ஜிஎஸ்டியால் மாநில நிதி சுயாட்சி பறிக்கப்பட்டுள்ளது, 15வது நிதி குழு பரிந்துரையால் தமிழகத்திற்கு ரூ.40,000 கோடி நஷ்டம் ஏற்படப் போகிறது. இப்படி இன்னும் பல கோரிக்கைகளை அடுக்கிக்கொண்டு போகலாம். இதில் ஏதாவது ஒரு வகையில் மத்திய அரசுக்கு தொடர்பு உள்ளது. ஆனால் இந்த விழைவுகள் நிறைவேற வேண்டுவதாக மத்திய அரசின் தலைமை பொறுப்பிலுள்ள பிரதமரே டுவிட் செய்துள்ளதை என்னவென்று நினைப்பது.