கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றகதையாக பாஜக அலைந்து கொண்டிருக்கிறது. ஜாதி, மதம், ஊழல், மோசடி, வன்முறை...இப்படி எதைப் பயன்படுத்தியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று பாஜக தலைவர் அமித்ஷா துடித்துக் கொண்டிருக்கிறார். பாஜக-வுக்கும் ஜனார்த்தன ரெட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கடந்த மாதம் கூடபாஜக தலைவர் அமித்ஷா கூறியிருந்தார். ஆனால், தற்போது சுரங்க ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜனார்த்தன ரெட்டியின்இரண்டு சகோதரர் களுக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சீட் வழங்கியுள்ளது. ஜனார்த்தன ரெட்டிக்கு நெருக்கமான சிறீராமுலு என்பவருக்கும் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேள் விகள் எழுந்தபோது, ஜனார்த்தன ரெட்டிக்கும் கட்சிக்கும்தானே தொடர்பில்லை; அவரது சகோதரருக்கு சீட் கொடுப்பதில் என்ன தவறு? பாஜகவினர் சிலர் சமாளித்தனர். ஆனால், சிறீராமுலு-வின் வேட்புனுத் தாக்கல் பேரணியில் ஜனார்த்தன ரெட்டி சகல ஜபர்தஸ்துகளுடன் கலந்து கொண்டிருக்கிறார்.
இதையொட்டி பொதுக்கூட்டம் ஒன்று நடந்த நிலையில், ஜனார்த்தன ரெட்டியை மேடைக்கு வரச் சொல்லி எடியூரப்பா அழைப்பின் பேரில் மேடையேறி மத்தியப் பிரதேச முதல்வரும் வியாபம் ஊழல் புகாருக்குச் சொந்தக்காரருமான சிவராஜ்சிங், நில ஒதுக்கீட்டு ஊழல் வழக் கில் தொடர்புடைய எடியூரப்பா ஆகியோருடன் நிழற்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.அடுத்ததாக பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டி பிரச்சாரத்திலும் ஈடுபடப் போகிறாராம்.