
நேபாள எல்லையோர மாவட்டமான ஹம்லாவில், 11 கட்டடங்களைச் சீனா அத்துமீறி கட்டியுள்ளதால், நேபாளம் ஆத்திரம்அடைந்துள்ளது.
நேபாள எல்லைப் பகுதியில் உள்ள ஹம்லா மாவட்டத்தில் சீனாவின் தரப்பில், 11 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த தகவலை தொடர்ந்து, நகராட்சி அதிகாரி விஷ்ணு பகதுார் தமாங் தலைமையிலான குழுவினர், அந்த பகுதிக்கு, கடந்த, 20ம் தேதி சென்று பார்வையிட்டனர்.
அது குறித்து, தமாங் கூறியதாவது "சர்ச்சைக்குரிய அந்த பகுதிக்கு நாங்கள் சென்றதும், சீன ராணுவத்தினர் மற்றும் அந்நாட்டு அரசு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று, சற்று தொலைவில் இருந்தபடி, 'மைக்' மூலம் எங்களிடம் பேசினர். கட்டடங்கள் கட்டப்பட்டுள்ள பகுதி, நேபாளத்திற்கு சொந்தமானது என, அவர்களிடம் நாங்கள் கூறினோம். எனினும், அதை ஏற்க மறுத்த அவர்கள், அந்த பகுதி, சீனாவுக்குச் சொந்தமானது என வாதாடினர். அந்த பகுதியை, சீன வரைபடத்தில் இணைத்து, அந்த வரைபடத்தையும் எங்களிடம் காண்பித்தனர்." என்று அவர் கூறினார்.
இது குறித்து, ஹம்லா பாராளுமன்ற உறுப்பினர் சக்கா பகதுார் லாமா கூறியதாவது: எல்லையில் இருந்த துாண் காணாமல் போனதால் தான், இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. துாண் இருக்கும் பகுதி கண்டறியப்படும் வரை, இந்த பிரச்னை நீடிக்கும். சாலை கட்டுமானத்தின்போது, அந்த துாண் சேதமடைந்தது. அந்த பகுதியில், 2005ல், ஒரே ஒரு குடிசை மட்டுமே இருந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.இதையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த எல்லைப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள, அரசு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை, உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.
சீனாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நேபாள மக்கள், போராட்டங்களில் குதித்துள்ளனர்.
'சீனா, பின்வாங்க வேண்டும்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் காத்மாண்டுவில் உள்ள சீன துாதரகத்திற்கு வெளியே, நுாற்றுக்கணக்கானோர் திரண்டு, சீனாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.