Home » சட்டம் & அரசியல் » தீர்வு குறித்து இனியும் பயனில்லை 13-வது அரசமைப்புச் சட்ட திருத்தத்தையேனும் முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருவோம்

தீர்வு குறித்து இனியும் பயனில்லை 13-வது அரசமைப்புச் சட்ட திருத்தத்தையேனும் முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருவோம்

மைத்திரிபால சிறிசேனா அரசு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவை திரட்டும்...

👤 Saravana Rajendran23 April 2018 6:46 AM GMT
Share Post

மைத்திரிபால சிறிசேனா அரசு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவை திரட்டும் வலிமையை இழந்து போய்விட்டது. அதனால் இந்த அரசின் கீழ் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது உட்பட்ட பல முக்கிய திருத்தங்கள் அடங்கிய புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவது என்பது சாத்தியமற்றுப் போய்விட்டது. இந்த உண்மை நிலைமையை புரிந்துகொண்டு இந்த அரசின் மீதமுள்ள காலத்தில் வேறு பயனுள்ள தீர்வுகளை நாம் எட்ட முயற்சிக்க வேண்டும். குறைந்தபட்சம் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் இணக்கம் காணப்பட்ட சட்டமாக்கப்பட்ட அதிகாரப்பகிர்களையாவது நடைமுறைப்படுத்துவது குறித்து முயற்சிக்கலாம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மூத்த சட்டத்தரணியுமான என்.சிறீகாந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலே இக்கருத்தை அவர் முன்வைத்தார். இச்சந்திப்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமான எஸ்.குகதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். இப்பத்திரிகையாளர் சந்திப்பு 20/04/2018 அன்று யாழ். நகரில் உள்ள யு.எஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இனப்பிரச்சினைத் தீர்வையும் உள்ளடக்கிய புதிய அரசமைப்பை ஏற்படுத்துவதாயின் அதற்கும் குறைந்தபட்சம் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதாவது அந்த முயற்சியை எதிர்க்கும் தரப்பில் மூன்றில் ஒன்றுக்கும் கூடிய எம்.பிக்கள் ஒன்று திரளாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். தற்போதைய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இதில் மூன்றில் இரண்டு பங்கு என்பது 150 எம்.பிக்கள். அதாவது இந்த முயற்சியை எதிர்க்கும் எம்.பிக்கள் எண்ணிக்கை 75 க்கும் அதிகமாகாமல் இருக்க வேண்டும்.
ஆனால் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கும் விடயத்தில் எதிரணி எம்.பிக்கள் 76 பேர் ஒன்று சேர்ந்துள்ளனர். அதாவது அரசை எதிர்க்கும் எம்.பிக்களின் எண்ணிக்கை 75ஐ தாண்டிவிட்டது. அதனால் இனிமேல் இந்த அரசினால் புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு எம்.பிக்களின் ஆதரவைத் திரட்டுவது சாத்தியமற்றது. இதனால் இனிமேல் இந்த அரசுடன் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசுவது அர்த்தமற்றது, அது சாத்தியமற்றது, பலனற்றது. ஆகவே இந்த ஆதரவுடனான நல்லிணக்கத்தை வேறு பயனுள்ள வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறைந்தபட்சம் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் இணக்கம் காணப்பட்ட சட்டமாக்கப்பட்ட அதிகாரப்பகிர்வு போன்ற திருத்தங்களையாவது நடைமுறைப் படுத்துவது குறித்து முயற்சிக்கலாம்.
13வது திருத்தத்தின் கீழ் சட்டமாக்கப்பட்டுள்ள காணி அதிகாரங்கள், காவல்துறை அதிகாரங்கள் போன்றவற்றைத் மாகாணசபைகள் பிரயோகிக்கக்கூடிய வரையிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் நல்லாட்சி அரசு தனது நல்லிணக்கச் செயற்பாட்டை அர்த்தமுள்ள வகையில் வெளிப்படுத்தலாம்.
அத்தகைய விடயங்களில் செயற்படுவதற்கு இந்த அரசை தூண்டுவதன் மூலம் குறைந்தபட்ச இலக்குகளையாவது நாம் அடையமுடியும். இந்த அரசுடன் தமிழர் தரப்பு செய்யக்கூடிய சாத்தியப்பாடுள்ள விவகாரம் இதுவாகத்தான் இருக்க முடியும்.
இந்த அரசியின் எஞ்சிய பதவிக் காலத்தில் இதற்கு அப்பால் ஏதும் சொல்ல முடியும் என இனி மேலும் நம்புவதற்கு இடம் ஏதுமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.