முன்னாள் பிரதி அமைச்சரான கருணா சரணடைந்த 1200 படையினரையும் கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸாரையும் கொலை செய்தார் என்பது உண்மை தான் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் தெரிவித்திருப்பது போன்று ஆனையிறவிலும் கிளிநொச்சியிலும் 3000 இராணுவத்தினரை அவர் கொலை செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனையிறவு முகாமினை ஒரே இரவில் தொடர் தாக்குதலில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை கொன்று குவித்தோம் என அண்மையில் கருணா தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்தேன் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர் பெரும் வீரராக முயல்கின்றார். ஆனால் அவர் சரணடைந்த வீரர்களையே கொலை செய்தார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும் கருணாவை சிறையில் அடைக்கவேண்டும் என்று சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.