சென்னையில் பாரதிராஜாவுடனான ஆலோசனைக்கு பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மெரினா கடற்கரையில் என்ன இருக்கிறது. அங்கு மணலும், நீரும்தான் இருக்கிறது. எனவே அங்கு அறவழியில்தான் போராட முடியும். வீதிகளில் போராடினால்கூட கடைகளை உடைப்பார்கள் ,பேருந்துகளை மறிப்பார்கள் என நினைக்கலாம்.போராட்டத்தை எப்போதுமே தமிழர்கள் அறவழியில்தான் நடத்துகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகவின் சட்டம் ஒழுங்கு கெடும் என உத்தநீதிமன்றம் கூறுகிறது. ஏன் தமிழகத்தை பற்றி கூறவில்லை? இங்கு யாரும் அப்படி வன்முறையில் இறங்க மாட்டோம்.
கர்நாடகாவில் தமிழகத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து எரிக்கப்பட்டன. அதற்காக இங்கு நாம் கர்நாடக மாநில பேருந்தை எரித்தோமா என்ன?. கர்நாடக தேர்தலுக்கு பிறகாவது வாரியம் அமைக்கப்படும் என்று பாஜக அரசு சொல்கிறதா? இது தேர்தல் அரசியல். தமிழகத்துக்கு காவிரி நதி நீர் என்பது உயிர் ஆதாரம். பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் போராட்டத்தையும் பாதிப்புக்கு ஆளாக்குபவர்களின் போராட்டத்தையும் நாம் ஒன்றாக பார்க்கக் கூடாது.
காவிரி பிரச்சினை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தப்படுகிறது. காவலரைத் தாக்கிய நபருடன் நான் எடுத்து கொண்ட புகைப்படம் குறித்து கேட்கிறீர்கள். அதுபோல் நான் லட்சக்கணக்கானவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளேன். அப்படி புகைப்படம் எடுப்பவர்கள் எல்லாம் என் கட்சிகாரர்கள்தானா?
அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியதுதானே. அந்த நபர் என் கட்சியாக இருந்தால் உடனடியாக கட்சியில் இருந்து வெளியேற்றி விடுவேன்.
சிங்கள ராணுவத்திடம் இருந்து தமிழக மீனவர்களை காக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காஷ்மீரில் காவல்துறையினரால் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு ரஜினி கண்டனம் தெரிவிக்காதது ஏன்? காவிரி பிரச்னையை திசை திருப்பவே காவல்துறைக்கு ஆதரவாக ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்றார் சீமான்