
அமைதி மற்றும் நல்லிணக்க செயன்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை சிறிலங்கா நடைமுறைப்படுத்துவது அவசியம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடனான கொள்கையில் முதலில் சிறிலங்காவுக்கே முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் காணொளி மூலமான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
இதன்போது சமீபத்தில் பொதுத்தேர்தலில் பெற்ற வெற்றிக்கு சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தனது வாழ்த்துக்களை நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றி உங்கள் தலைமை மீதான நம்பிக்கையை காட்டுகிறது என்றும், இந்த வெற்றி இந்திய -சிறிலங்கா உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க வாய்ப்பளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு எப்போதும் அண்டை நாடுகளுக்கு முதலிடம் என்ற எனது அரசாங்கத்தின் கொள்கை மற்றும் சாகர்மாலா கோட்பாட்டின் படி, சிறிலங்காவுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.