Home » சட்டம் & அரசியல் » சிறிலங்கா பின்விளைவுகளைச் சந்திக்கும் ஐ.நா- மங்கள சமரவீர

சிறிலங்கா பின்விளைவுகளைச் சந்திக்கும் ஐ.நா- மங்கள சமரவீர

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பான தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக...

👤 Sivasankaran29 Feb 2020 4:03 PM GMT
சிறிலங்கா பின்விளைவுகளைச் சந்திக்கும் ஐ.நா- மங்கள சமரவீர
Share Post

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பான தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள சிறிலங்கா அரசை ஐ.நாவும் அதன் உறுப்பு நாடுகளும் சும்மாவிடாது. அவை பதிலடி கொடுத்தே தீரும். அதனால் நமது நாடு பாரதூரமான விளைவுகளைச் சந்திக்கக் கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.

"நமது ரணில் அரசு நாட்டின் ஜனநாயக நடைமுறைகளை மீறி - அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஆலோசிக்காமல் அரசமைப்புக்கு விரோதமாகவே ஐ.நாவின் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கியது என ஜெனிவாவில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இப்படி நம்மீது பழியைப் போட்டுவிட்டதால் தாம் தப்பிப்பிழைக்கலாம் என்று அரசு எண்ணுகின்றது. ஆனால், இந்த அரசு இப்படிக் கூறித் தப்பமுடியாது. ஐ.நாவும் அதன் உறுப்பு நாடுகளும் இந்த அரசை சும்மாவிடாது. அவை செயலில் பதிலடியை வழங்கியே தீரும். அதனால் நமது நாடும் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்கக் கூடும்.

அரசின் சுயநல அரசியல் தேவையால் பன்னாட்டு அரங்கில் நமது நாடு தனிமைப்படுத்தப்படவுள்ளது. அதேவேளை, நமது நாடு மோசமான பொருளாதார நெருக்கடியையும் சந்திக்கக்கூடும். ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைக்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைகூட மீண்டும் இடைநிறுத்தப்படலாம்.

போர் நிறைவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி - தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தாலேயே பன்னாட்டுப் பொறிமுறை விசாரணையை சிறிலங்காக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கொண்டு வந்தது.

அந்த இக்கட்டான நிலையில்தான் பன்னாட்டு உறவைப் பலப்படுத்தும் வகையில் தீர்மானங்களுக்கு நமது அரசு (ரணில் அரசு) இணை அனுசரணை வழங்கியிருந்தது. நாம் இணை அனுசரணை வழங்கியபடியால்தான் ராஜபக்ச குடும்பத்தினரும், இராணுவ அதிகாரிகளும் மின்சார நாற்காலியிருந்து காப்பாற்றப்பட்டார்கள். அதுமட்டுமல்ல நமது நாட்டின் மரியாதையும் பன்னாட்டு அரங்கில் காப்பாற்றப்பட்டது. இப்படியான நன்மைகளை நாம் செய்துள்ள போதிலும் சிறிலங்காவைப் பன்னாட்டிடம் காட்டிக்கொடுத்துவிட்டோம் என்று ராஜபக்ச அணியினர் நம்மைத் திட்டுகின்றார்கள்.

அதேவேளை, தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் நம்மைக் கைது செய்து சிறையில் அடைக்குமாறும் அந்த அணியிலுள்ள ஒருசிலர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைப் பார்த்து அழுவதா அல்லது சிரிப்பதா என்று நமக்குத் தெரியவில்லை.

ஆனால், பன்னாட்டுத்தை இந்த அரசு பகைத்துள்ளதால் சிறிலங்கா பாரிய பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை மட்டும் இப்போது உறுதியாகக் கூறுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.