Home » சட்டம் & அரசியல் » ராமராஜ்ஜியம்?

ராமராஜ்ஜியம்?

விஷ்வ இந்துபரிசத் அமைப்பின் அய்டி தொழில் நுட்பப் பிரிவில் முக்கிய நபரான அபிசேக் மிஸ்ரா என்பவர்...

👤 Saravana Rajendran25 April 2018 5:36 PM GMT
Share Post

விஷ்வ இந்துபரிசத் அமைப்பின் அய்டி தொழில் நுட்பப் பிரிவில் முக்கிய நபரான அபிசேக் மிஸ்ரா என்பவர் உத்தரப்பிரதேசம் லக்னோவில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகம் செல்ல வாடகைக்காரான ஓலாவிற்கு இணைய தளம் மூலம் அழைப்பு விடுத்தார். சிறிது நேரத்தில் வாடகைக்கார் வந்தது, அப்போது அவரது கைப்பேசிக்கு வாடகைக்கார் எண் மற்றும் வாடகைக்கார் ஓட்டுநர் பெயர் வந்தது. வாடகைக்கார் ஓட்டுநர் இசுலாமியர் ஆவார்; இதனை அடுத்து வெளியே சென்ற அவர் இசுலாமியர் ஓட்டுநர் ஓட்டும் வாடகைக் காரில் நான் பயணம் செய்யமாட்டேன் என்று கூறி அந்தக் காரை திருப்பி அனுப்பிவிட்டார். இதன் பிறகு சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை எழுதினார். அந்தப் பதிவை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும் மேலும் இரண்டு கேபினட் அமைச்சர்களுக்கும் பெருமையுடன் அனுப்பியுள்ளார். அதில் "நான் பதிவு செய்த வாடகைக்காரை ஓட்டும் ஓட்டுநர் இசுலாமியர் என்று தெரிந்த உடன் உடனடியாக அந்தக்காரை திருப்பி அனுப்பிவிட்டேன்" என்று எழுதியது மட்டுமல்லாமல், இசுலாமியர் குறித்த விவரங் களுடன் (ஸ்கிரீன் சாட்) பதிவு செய்துள்ளார். இவரின் இந்த நடவடிக்கைக்கு நாடுமுழுவதும் கடுமையான கண்டனங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.
ஆனால் இவர் தகவல் அனுப்பிய பாதுகாப்புத் துறை அமைச்சரும் மற்ற இரண்டு கேபினட் அமைச்சர்களும் எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக இருந்துவிட்டனர். மிகவும் மோசமான ஒரு நடவடிக்கையாக மதவெறியை பரப்பும் நோக்கத்தோடு ஒரு அமைப்பின் முக்கிய பிரமுகர் பதிவிட்டுள்ளார். அதை அமைச்சர்கள் பார்வைக்கும் வைத்துள்ளார். குறைந்த பட்சம் அந்த அமைச்சர்கள் இவ்வாறு செய்யக்கூடாது என்று அறிவுரையாவது அந்தப் பிரமுகரிடம் கூறியிருக்க வேண்டாமா? விஷ்வ இந்துபரிசத் அமைப்பின் தலைவர் ஒருவரின் இந்த செயல் குறித்து ஓலா நிறுவனம் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் அந்த, நபருக்குத் தனிப்பட்ட முறையில் அறிவுரை கூறியுள்ளது. அதில் "நமது நாடு மதச்சார்பற்றது. நாங்கள், எங்களது ஓட்டுநர்கள், பங்கீட்டாளர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் என யாரையும் ஜாதி, மதம், இனம் அல்லது சமயத்தின் அடிப்படையில் பாகுபடுத்திப் பார்ப்பதில்லை. அனைவரையும், அனைத்து நேரத்திலும் ஒரே மாதிரியாக மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என வலியுறுத்துகிறோம்" என பதிலளித்திருந்தது
இராமராஜ்ஜியம் அமைப்போம், இந்து ராஷ்டிரம் அமைப்போம் என்று குரல் கொடுப்பவர்களின் மனப்பாங்கு எந்தளவு பாறைபோல மனிதத் தன்மையற்று உறைந்து கிடக்கிறது என்பதற்கு இந்த ஒரு சோற்றுப் பதமே போதுமானது.
யாரோ ஒரு தனிப்பட்ட காவிக்காரர் இந்த மனப்பான்மையில் கிடந்துழலுகிறார் என்று தப்புக் கணக்குப் போட வேண்டாம்.
இந்துத்துவாவின் (பிஜேபி உட்பட) சகல தரப்பினரும் இந்தத் தரங்கெட்ட தன்மையில் தான் வெறிபிடித்துத் திரிகின்றனர்.
மக்கள் தொகையில் 14.20 சதவீத முஸ்லீம்களும், 5.8 சதவீத கிறித்தவர்களும் வாழும் ஒரு துணைக் கண்டம் இந்தியா; அதன் அரசமைப்புச் சட்டம் மதச் சார்பின் மையை வலியுறுத்துகிறது.
இப்பொழுது மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பா.ஜக. மக்கள் தொகையில் கணிசமாக இருக்கக் கூடியவர்களை ஓரங் கட்டுகிறது, அவர்களின் உரிமைகளை நசுக்குகிறது, இன்னும் சொல்லப் போனால் குடியுரிமையற்றவர்களாகக் கணக்குப் போடுகிறது என்றால், இவர்கள் ஒரு கண நேரமேனும் அதிகாரத்தில் இருக்க அடிப்படைத் தகுதி உள்ளவர்கள்தானா?
உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், கருநாடகம் போன்ற மாநிலங்களில் நடந்த - நடக்க இருக்கிற சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிட இவர்களுக்கு அறவே வாய்ப்புத் தரவில்லை என்பதிலிருந்து இவர்களின் குரூர பாசிசத்தின் நச்சுத் தன்மை புரியவில்லையா? 'ஓலா'விலிருந்து ஒவ்வொன்றிலும் மதவெறுப்பு மதங் கொண்ட இந்தக் காட்டு யானைகளை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் வாக்குச் சீட்டால் தண்டிக்கத் தயாராகட்டும்!