Home » முதன்மைச் செய்திகள் » பிரான்சில் தொடரும் மஞ்சள் அங்கி போராட்டம் - வன்முறை

பிரான்சில் தொடரும் மஞ்சள் அங்கி போராட்டம் - வன்முறை

பிரான்ஸ் நாட்டில் சுற்றுச்சூழலை காரணம் காட்டி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியது. இதனை எதிர்த்து கார் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

👤 Sivasankaran7 Jan 2019 10:43 AM GMT
பிரான்சில் தொடரும் மஞ்சள் அங்கி போராட்டம் - வன்முறை
Share Post

பிரான்ஸ் நாட்டில் சுற்றுச்சூழலை காரணம் காட்டி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியது. இதனை எதிர்த்து கார் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பொதுமக்களும் இணைந்து இந்த போராட்டம் தொடர்ந்ததால் பெரிய போராட்டமாக ஆனது. பெருந்திரளான மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

கார் டிரைவர்கள் அணியும் மஞ்சள் நிற அங்கிகளை அணிந்து கொண்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் இது "மஞ்சள் புரட்சி" என்றும், "மஞ்சள் அங்கி போராட்டம்" என்றும் அழைக்கப்பட்டது.

இந்த போராட்டம் தலைநகர் பாரீசை ஸ்தம்பிக்க வைத்தது. அதே சமயம் இந்த போராட்டத்தில் பல முறை வன்முறையும் வெடித்தது. மக்களின் இந்த ஓயாத போராட்டத்துக்கு அரசு பணிந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தொடர்ந்து 5 வாரங்களாக நடந்து வந்த மஞ்சள் அங்கி போராட்டத்தின் தீவிரம் சற்று குறைந்தது. எனினும் அதிபர் மெக்ரான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்தது.

8-வது வாரமாக நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் மஞ்சள் அங்கி போராட்டம் மீண்டும் வலுப்பெற்றது. மேலும் இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் வன்முறையும் வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, அவர்களை விரட்டி அடித்தனர்.