இந்தி திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார்சிறீதேவி மறைந்தார்
தமிழ் திரைஉலகில் இருந்து இந்திக்குச் சென்று மங்காப்புகழைப் பெற்ற சிறீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
👤 Saravana Rajendran25 Feb 2018 1:13 AM GMT

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை சிறீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது வயது 54-ஆகும்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சொந்த ஊராக கொண்டவர் சிறீதேவி இவர் 4 வயதிலேயே திரைப்படத் துறையில் நுழைந்தவர். தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்தார்.
தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். தமிழில் 16 வயதினிலே, மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழ் திரைப்பட உலகில் கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.
இவர் 2013-ம் ஆண்டில் மத்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவர். மேலும், இவர் பிலிம்பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்துக்காக தமிழக அரசின் விருது என பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை சிறீதேவி, இங்கிலிஸ் விங்கிலிஸ், புலி என நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த மாம் திரைப்படம் வெளியானது. இந்நிலையில், நடிகை சிறீதேவி திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று இரவு துபாய் சென்றார். இரவு 11 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவருடைய இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது என பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு போனி கபூர் என்ற கணவரும், ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire