பன்னாட்டுப் பொறிமுறையை ஏற்படுத்த மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை
சிறிலங்கா குறித்த பன்னாட்டுப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தக் கோரி, மனித உரிமைக் கண்காணிப்பகம், பன்னாட்டு...

சிறிலங்கா குறித்த பன்னாட்டுப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தக் கோரி, மனித உரிமைக் கண்காணிப்பகம், பன்னாட்டு மன்னிப்புச்சபை உள்ளிட்ட 8 பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் ஐநா மனித உரிமை ஆணையாளருக்குக் கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளன.
''சிறிலங்காவில் மனித உரிமை விடயத்தில் குறிப்பிடத்தக்க பின்னோக்கிய நகர்வுகள் இடம்பெறுகின்றன என்பதற்கான அறிகுறிகள் குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம்.
ஐநா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகுவதாக அரசாங்கம் ஆற்றியுள்ள உரை இதனை உறுதி செய்வது போல காணப்படுகின்றது.
அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை மாற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவு நீதித்துறை மற்றும் ஏனைய ஆணைக்குழுக்களினதும் சுதந்திரத்தைப் பாதிக்கும்.
சிறிலங்கா அரசாங்கம் காணாமல்போனோர் குறித்த அலுவலகச் சட்டம் குறித்து மீள் பரிசீலனை செய்கின்றது.
இதேபோன்று பன்னாட்டு சட்டங்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் காணாமல்போனவர்கள் குறித்து ஜனாதிபதி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஈவிரக்கமற்ற கருத்து, காணாமல்போனவர்களின் குடும்பத்தினருக்கு மேலும் துயரத்தை அளித்துள்ளது.
பன்னாட்டு சட்டங்களை மீறியதாக சிறிலங்கா தொடர்பான அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமை குறித்த மனித உரிமை ஆணையாளரின் கரிசனையை நாங்களும் பகிர்ந்து கொள்கின்றோம்.
2019 நவம்பர் முதல் அரசச் சார்பற்ற அமைப்புகளை கண்காணிக்கும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் கண்காணிப்பு ஆபத்து அதிகரித்துள்ளது.
பல மனித உரிமை அமைப்புகளிற்கும், ஊடகங்களிற்கும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் அச்சுறுத்தும் வருகைகளை மேற்கொண்டுள்ளனர்.
பத்திரிகையாளர்களிற்கு எதிரான மரண அச்சுறுத்தல்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளன. சிறிலங்காவில் மீண்டும் அச்ச சூழல் தோன்றியுள்ளது. குறிப்பாக உண்மை நீதி பொறுப்புக்கூறலுக்காகக் குரல் கொடுப்பவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சூழ்நிலை திரும்பியுள்ளது.
ஐநா தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட தெளிவான கட்டமைப்புகளை ஏற்று நடக்கப் போவதில்லை எனச் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதால் சிறிலங்காவை பன்னாட்டு சட்டங்களின் கீழான அதன் கடப்பாடுகளின் அடிப்படையில் பொறுப்புறக்கூறலிற்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.