குளிர்காலத்தில் வரும் இருமலைப் போக்க என்ன செய்யலாம்?
குளிர் காலம் வந்து விட்டாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் சளித் தொல்லையால் அவதிப்படுவார்கள்.

குளிர் காலம் வந்து விட்டாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் சளித் தொல்லையால் அவதிப்படுவார்கள். இவற்றுக்குத் தீர்வு, நம் வீட்டு சமையலறையிலேயே இருக்கிறது. நம் முன்னோர்கள் இதை பக்குவமாக நமக்கு சொல்லி சென்றிருக்கிறார்கள். நம்மில் பலர் அதை கடைப்பிடிப்பது தான் இல்லை.
எப்போதாவது வரும் சளி இருமல் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றலே அதைக் கவனித்துக்கொள்ளும். ஆனால், அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு, காலை எழுந்ததும் அடுக்குத் தும்மல், நெஞ்சில் சளி, அடிக்கடி தொண்டை கட்டிக்கொண்டால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.
சளி, இருமலைப் போக்கிட என்ன செய்யலாம்?
⊗ மிளகு ஓர் அற்புதமான மருத்துவ உணவுப்பொருள். மிளகின் Immuno Modulating Effect காரணமாக, தும்மல், அலர்ஜியால் வரும் சளி (Sinusitis), ஆஸ்துமாவில் தங்கும் சளிக்கு உடனடியாக பலனை அளிக்கும். சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் ஒவ்வோர் உணவிலும் மிளகு சேர்ப்பது அவசியம்.
⊗ குழந்தைக்கு இரவில் மட்டும் இருமல் ஏற்படுகிறதா? நான்கு மிளகை எடுத்து தூளாக்கி, ஒரு டீஸ்பூன் தேனில் கலந்து, இளஞ்சூடாக்கி, கால் டம்ளர் தண்ணீரில் உறங்குவதற்கு முன்னர் பருகக் கொடுக்கலாம். இருமல் நீங்கி, இதமான தூக்கம் கிடைக்கும். குழந்தை, வெண்பொங்கலில் இருக்கும் மிளகை பொறுக்கி எடுத்துப் போட்டால் செல்லமாக மிரட்டி சாப்பிட வைக்கலாம்.
⊗ பால், தயிர், இனிப்பு மூன்றும் நுரையீரலில் கபத்தை (சளி) சேர்க்கக்கூடியவை. இவற்றையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சாக்லேட், ஐஸ்க்ரீம் வேண்டவே வேண்டாம். பழங்களில் எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை தவிர மற்றவற்றைச் சாப்பிடலாம்.
⊗ உணவில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும். சுரைக்காய், தடியங்காய் (வெள்ளைப் பூசணி), மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்றவற்றை சில வாரங்களுக்குத் தவிர்ப்பது நல்லது. கண்டிப்பாக இவற்றைச் சாப்பிடவேண்டிய சூழல் ஏற்பட்டால், மிளகுத்தூள் தூவிச் சாப்பிடலாம். இதன் மூலமாக சளி, இருமல் தவிர்க்கலாம்.
⊗ மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மதியம் சாப்பிடும்போது, மணத்தக்காளி வற்றலை வறுத்துப்போட்டு, முதல் கவளத்தை சாப்பிட்டுவிட்டு, பிறகு குழம்பு, காய் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
⊗ திப்பிலியை இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து தேனில் உணவுக்கு முன்னர் 3 சிட்டிகை அளவில் கலந்து சாப்பிட்டால் சளி குறையும்.
உடல்நிலை சரியில்லாத போது உணவை பக்குவமாக சாப்பிடுதல் வேண்டும். அதுவே நல்லது. நோயை விரட்ட எதிர்ப்பு சக்தி உள்ள உணவால் மட்டுமே முடியும். மருந்து விரைவாக உடலில் செயல்பட அதற்கேற்றவாறு உணவு எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.