Home » மருத்துவம் & சுகாதாரம் » மனதை அமைதிப்படுத்தவே தியானமும், யோகாவும்

மனதை அமைதிப்படுத்தவே தியானமும், யோகாவும்

இன்றைய நவீன உலகில் பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையாகி விட்டது. பணமே பிரதானம் என்று நம்மில் பெரும்பாலானவர்கள் மூச்சு விடக் கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

👤 Sivasankaran11 Jan 2019 6:05 AM GMT
மனதை அமைதிப்படுத்தவே தியானமும், யோகாவும்
Share Post

இன்றைய நவீன உலகில் பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையாகி விட்டது. பணமே பிரதானம் என்று நம்மில் பெரும்பாலானவர்கள் மூச்சு விடக் கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

வாழ்நாள் முழுவதும் உழைத்து, உழைத்து பணத்தை தேடி அலைந்து, ஓய்ந்து, திரும்பி பார்க்கும் போது தான் உண்மையான இன்பம் பணத்தில் இல்லை என்ற யதார்த்தம் தெரிய வரும். வசதி, வாய்ப்புகள் எல்லாம் இருக்கும், ஆனால் நிம்மதி இருக்காது. அதாவது மனதில் அமைதி இருக்காது. மனதிற்குள் ஒருவித விரக்தி ஏற்பட்டு விடும். அப்போது மனது அலைபாயும். மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலாது.

மனம் சரியில்லா விட்டால் கவலைகள் வந்து சேரும். மன அமைதியின்றி இருப்பின் நோய்கள் தானே வந்து விடும். இதை சரி செய்ய மனம் அமைதியாகவும், திடமாகவும் இருக்க வேண்டும். மனதை எப்படி திடத்தை ஏற்படுத்துவது? அதற்கு மனதை கட்டுப்படுத்த வேண்டும்.

மனதை எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு சித்தர்கள் வழிகாட்டி உள்ளனர். மனதை ஒருமுகப்படுத்த தியானமும், உடலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள யோகாவும் செய்யுங்கள் என்று சித்தப்புருஷர்கள் வழிகாட்டியுள்ளனர்.

தியானமும், யோகாவும் செய்து வர நமது உடல் பற்றியும், நம்மை பற்றியும் நமக்கு தெரியத் தொடங்கி விடும். மனம் ஒருமுகப்பட்டு விடும். மனதை கட்டுப்படுத்தும்பட்சத்தில் உலகில் உள்ள அனைத்தையும் நாம் கட்டுப்படுத்தலாம்.

நம் நாட்டு சித்தப்புருஷர்கள் இந்த உலகுக்கு அளித்துள்ள மிகப்பெரிய பரிசு ''அஷ்டாங்க யோகம்'' எனப்படும் யோகக் கலையாகும். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி எனும் அந்த 8 படிகளையும் நாம் சரியாக செய்தால் உடல், மனம், ஆத்மா மூன்றும் தூய்மையாகி விடும்.

அது இறைவனுடன் நாம் லயிக்க வழிகாட்டும். அதாவது பிறவாமை எனும் உயர்ந்த நிலைக்கு செல்ல உதவும். எனவே முதலில் உடலையும் மனதையும் நன்கு புரிந்து கொள்ளுங்கள். நம் உடம்பு 72 ஆயிரம் நாடிகளால் பிண்ணப்பட்டிருப்பதாக சித்தர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நாடிகள் அனைத்தும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்கினை, துரியம் ஆகிய 7 சக்கரங்களில் இணைக்கப்பட்டு இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளனர்.

இந்த 7 சக்கரங்களும் நமது உடம்பின் பின்புறத்தில் முள்ளந்தண்டு வடத்தில் உள்ளன. இந்த 7 சக்கரங்களும் சீராக இருந்தால்தான் உடலும், மனமும் சீராக இருக்கும். முதுகுத் தண்டு வடத்தின் கீழே உள்ள மூலாதார சக்கரத்தில் இறை சக்தியான ''குண்டலினி'' இருக்கிறது. இந்த குண்டலியானது நமக்குள் புதைந்திருக்கும் ஆற்றலாகக் கருதப்படுகிறது.

தியானத்தின் மூலம் நாம் இந்த குண்டலினியைத் தூண்டி விட்டால், நமக்கு அளவிட முடியாத அளவுக்கு ஆற்றல்கள் கிடைக்கும். சித்தர்கள் அந்த ஆற்றலை பெற்றதன் மூலம்தான் சித்தாடல்கள் செய்தனர். உலக மக்களுக்கு சேவை செய்ய, அந்த ஆற்றலை பயன்படுத்தி அற்புதங்கள் நிகழ்த்தினார்கள். எனவே குண்டலினியை தூண்டி விட்டு ஆற்றலை பெற வேண்டும். குண்டலினியைத் தூண்டும் போது அது மூலாதாரத்தில் இருந்து புறப்பட்டு, ஒவ்வொரு சக்கரமாக கடந்து உச்சந்தலையில் உள்ள துரியம் வரை வரும்.

அப்படி கொண்டு வந்து விட்டால், நீங்களும் மகான் ஆகி விடுவீர்கள். ஆனால் குண்டலினியை தட்டி எழுப்புவது என்பது அவ்வளவு சாதாரண விசயமல்ல.

நமது மூலாதாரத்தில் அது பாம்பு போல மூன்றரை சுருளாக சுருண்டு புதைந்திருப்பதாக சித்தர்கள் எழுதி வைத்துள்ளனர். பாம்பை சீண்டினால் சீறும் அல்லவா? அது போல பாம்பு போல இருக்கும் குண்டலினியை தூண்டினால் அது ஊர்ந்து மேலே வரும்.

அப்படி வரும் போது நமது சாதாரண உணர்வு நிலை, பரபிரம்ம உணர்வு நிலைக்கு உயரும். தெய்வீக ரகசியங்கள் கூட தெரியத் தொடங்கும். பொதுவாக நமது உச்சந்தலையில் உள்ள அம்சத்தை சிவ அம்சம் என்பார்கள். குண்டலினியை சக்தி அம்சம் என்பார்கள். இரண்டும் சேரும் போது பேரின்பம் கிடைக்கும்.

100-க்கு 99 பேர் இந்த பேரின்பத்தை உணராமலேயே தங்கள் வாழ்வை பூர்த்தி செய்து விடுகிறார்கள். தியானம், தவம், யோகம் செய்ய முடியாததே அதற்கு காரணமாகும்.

மன உளைச்சலை போக்கிட தியானம் செய்ய வேண்டும். மன அமைதி பெறும். தொடக்கத்தில் இது முடியாத நிலையாக இருந்தாலும், தொடர்ந்து செய்வதால் மனதை கட்டுப்படுத்தி தியானத்தில் ஆழலாம். தியானம் செய்வதால் மனம் அமைதிப் பெறும். உடல் வலிமை பெறும்.