Home » மருத்துவம் & சுகாதாரம் » ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் வெந்தயம்

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் வெந்தயம்

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்.

👤 Sivasankaran20 Feb 2019 4:21 PM GMT
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் வெந்தயம்
Share Post

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. பலருக்கும் வெந்தயத்தின் முழுமையான பயன்பாடு இப்போது தெரிவதில்லை.

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.

மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும். இவ்வாறு வெந்தயம் பலவகையான மருத்துவ குணங்களைக் கொண்டது.