மன அழுத்தத்தை குறைக்கும் வெட்டிவேர்
முடி உதிர்வது நிற்கும். பளபளப்பாகவும் கருமையாகவும் வளரும். கண்களும் குளிர்ச்சியடையும்.

வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை விரட்டி அடிப்பதில், வெட்டி வேர் மூலிகைக்கு நிகர் எதுவுமே இல்லை. வெட்டி வேரினை விலாமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். பரவசமூட்டும் நறுமணமும் கொண்ட வெட்டிவேரின் வேர்ப்பகுதி மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
நன்றாகச் சுத்தப்படுத்தி உலர்த்திப் பொடித்த வெட்டி வேர்த் தூளையும், பெருஞ்சீரகம் என்னும் சோம்புத் தூளையும் சம அளவு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு டம்ளர் வெந்நீரில் கலக்க வேண்டும். இதை, தினமும் காலையில் சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு, உடல் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு போன்ற கோடைக்காலக் கடுப்பு நோய்கள் காணாமல் போகும்.
வெட்டி வேர் குடிநீர் குளிர்ச்சியைத் தந்து நா வறட்சியைப் போக்கும். புதியதாக மண்பானை வாங்கியதும், இரண்டு மூன்று நாட்கள் தண்ணீரை மாற்றி மாற்றி நிரப்பிவைத்து அலசி சுத்தப்படுத்திப் பழக்க வேண்டும். இந்த மண்பானையில் ஒரு கைப்பிடி சுத்தமான வெட்டி வேரையும், சிறிது திருநீற்றுப் பச்சிலையையும் போட்டு, அதில் நல்ல நீரை ஊற்றிவைத்து குடிநீராகப் பயன்படுத்தலாம். நா வறட்சி, தாகம் தீரும். மன அழுத்தம் குறைந்து மன மகிழ்ச்சி கூடும்.
சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், வெட்டி வேர் சேர்த்து ஊறவைத்து தலைமுடிக்குத் தேய்த்துவர, தலைமுடியின் வேர்க்கால்கள் பலப்படும். முடி உதிர்வது நிற்கும். பளபளப்பாகவும் கருமையாகவும் வளரும். கண்களும் குளிர்ச்சியடையும்.
வெட்டிவேர் எண்ணெய்யை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும். இந்த எண்ணெய்யை தேய்த்து குளிக்கலாம். சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும்.