Home » மருத்துவம் & சுகாதாரம் » கோடையை சமாளிக்க சில எளிய யோசனைகள்

கோடையை சமாளிக்க சில எளிய யோசனைகள்

பெண்களுக்கு, சிறுநீர் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது.

👤 Sivasankaran23 May 2019 4:37 PM GMT
கோடையை சமாளிக்க சில எளிய யோசனைகள்
Share Post

கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது, அனல் காற்று வீசுகிறது. பருவ மழை பெய்யாத காரணத்தால், மாலை, இரவு நேரங்களில் கூட குளிர் காற்று வீசுவதில்லை.

உடல் முழுவதும் சூடு பறக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நோய் தாக்கக்கூடிய அபாயம் உண்டு. கோடையில் வரும் சின்னம்மை, பெரியம்மையோடு, வேர்க்குரு, சூட்டு கொப்புளம் என தோல் சம்மந்தமான பல நோய்களும் தாக்கி வருகின்றன.

வெயிலின் கொடுமை காரணமாக "ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டு, உயிரிழப்பையும் ஏற்படுத்தும். வெயில் தாக்கத்தால் சோர்வு, உறக்கமின்மை என பல பிரச்னைகளை ஏற்படும்.

வெயில் காலங்களில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். பெண்களுக்கு, சிறுநீர் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. தண்ணீர் எந்த அளவுக்கு அதிகம் குடிக்கிறமோ, அந்த அளவுக்கு, இப்பாதிப்பை தவிர்க்கலாம். பெண்கள், பெரும்பாலும், சிறுநீர் கழிக்காமல் பல மணி நேரம் அடக்கி வைக்கின்றனர். பஸ்சில் பயணம் செய்யும்போதும் தவிர்க்கின்றனர். இது, பெரிய பிரச்னையை ஏற்படுத்தி விடும். கர்ப்பிணிகள், குறைந்தது, நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல், தினமும் இரண்டு இளநீர், பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். வியர்குரு பிரச்னை அதிகம் ஏற்படும். உடல் சூடு அதிகரிக்கும்; வயிற்று பகுதிகளில், அரிப்பு, வெயில் கொப்புளம் உள்ளிட்ட பிரச்னைகள் வியர்வை காரணமாகவே ஏற்படும்.

தினமும் இரண்டு வேளை குளிப்பதை கட்டாயமாக்க வேண்டும். காற்றோட்டம் அதிகமுள்ள பகுதியில் இருக்க வேண்டும். குழந்தைகளை வெயிலில் விளையாட விடக்கூடாது. குழந்தையை குளிப்பாட்டினால், சளி பிடித்து விடும் என எண்ணக் கூடாது; வியர்வை போகும் வகையில் கண்டிப்பாக குளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கும் அபாயம் உள்ளதால், தடுப்பூசி போட வேண்டும்.

வெப்பத்தை ஈர்க்கும், கருப்பு, கருநீலம் உள்ளிட்ட நிற உடைகளை அணியாமல், வெள்ளை, மஞ்சள், இளம்பச்சை நிற உடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும். நடந்தோ, இரு சக்கர வாகனங்களில் செல்லும்போதோ, நேரடியாக தலையில் வெப்பம் இறங்காமல் பாதுகாக்கும் வகையில், தொப்பி அணிந்து கொள்ள வேண்டும். கண் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கூலிங்கிளாஸ் அறிய வேண்டும்.

இளநீர், மோர், எலுமிச்சை சாறு உள்ளிட்ட குளிர்பானங்களை அருந்த வேண்டும்.தர்ப்பூசணி, நுங்கு, பனங்கருப்பட்டி, பனங்கல்கண்டு, வெள்ளரி போன்றவற்றை வாங்கி சாப்பிடலாம்.

கோடையில், தண்ணீராலும், வெயிலாலும், சிறுநீரக கல் உற்பத்தி அதிகரிக்கும். ஒரு கிலோ உப்பை, 10 லிட்டர் தண்ணீரில் கரைப்பதற்கும், ஒரு லிட்டர் தண்ணீரில் கரைப்பதற்கும் வித்தியாசம் உள்ளதுபோல், தண்ணீர் குடிக்காமல், சிறுநீர் பையில் உப்பு நீர் அதிகம் தேங்க விடக்கூடாது. தினமும், 2.5 லிட்டர் சிறுநீர் செல்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்தளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.

முக்கியமாக கோடை விடுமுறைக்கு, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்லும்போது, கண்டிப்பாக, தங்களது மருத்துவ சிகிச்சைகள் குறித்த "பைல்'களை எடுத்துச் செல்ல வேண்டும். சிகிச்சைக்கு வருவோர், பெரும்பாலும் பழைய மருத்துவ சிகிச்சை குறித்து, எதுவும் கொண்டு வராத நேரத்தில், சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. பர்ஸ், ஹேண்ட் பேக் வைத்திருப்பதை போல், மருத்துவ குறிப்புகளையும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இது அவசியமானது.