மது பழக்கத்தால் அதிகரித்து வரும் கணையப்புற்றுநோய்
நான்காம் நிலையில், அறுவை சிகிச்சை செய்தாலும் பலனில்லை.

கணையப்புற்று நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு, 60 முதல் 70 வயதுக்குள் வருகிறது. ஆனால், இன்றைக்கு, 40 முதல் 50 வயது உள்ளவர்களுக்கும், அதற்கு குறைவான வயதினருக்கும் கூட வருகிறது. மது, புகை, புகையிலை உள்ளிட்ட கெட்ட பழக்கங்கள்தான் முக்கிய காரணம். மரபியல் அடிப்படையிலும் இந்நோய் வருகிறது.
கணையத்தின் தலைப்பகுதியில் வந்தால் மஞ்சள் காமாலை, அஜீரணம், வாந்தி, உடல் இளைத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் வரும். கணையத்தின் உடல் மற்றும் வால் பகுதியில் வந்தால் வயிற்று வலி, உடல் இளைத்தல், பசியின்மை உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால், ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
ஆரம்ப கட்டமாக இருந்தால், கணையத்தின் தலை மற்றும் வால் பகுதிகளில் உள்ள கேன்சர் கட்டியை, அறுவை சிகிச்சை செய்து எடுத்து விடலாம். கணையம் முழுவதும் பரவி இருந்தால், சர்ஜரி செய்ய முடியாது. அவர்களுக்கு பித்தம் இறங்கவும், உணவு இறங்கவும் தேவையான அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சை அளிக்கலாம். கணையத்தில் புற்று நோய் பரவி முற்றிய நிலையில் இருந்தால், முழுமையாக குணப்படுத்த முடியாது.
ஆரம்பநிலை அல்லது அதற்கு அடுத்த நிலையில் இருந்தால், அறுவை சிகிச்சை செய்து சரி செய்து விடலாம். ஆனால், இப்போது பெரும்பாலும் மூன்று அல்லது நான்காம் நிலையை கடந்து, நோய் முற்றிய நிலையில்தான் வருகின்றனர். மூன்றாம் நிலையில் அறுவை சிகிச்சை பலன் தரலாம்; உறுதியாக சொல்ல முடியாது. நான்காம் நிலையில், அறுவை சிகிச்சை செய்தாலும் பலனில்லை.
இப்போது நடுத்தர வயது உள்ள அதிக இளைஞர்கள், கணைய வீக்க நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், மது பழக்கம்தான். இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, 50 வயதுக்கு மேல் உள்ளவருக்கு காமாலை வந்தால், உஷாராகி விட வேண்டும். மலம் வெள்ளை நிறத்திலும், சிறுநீர் டீ நிறத்திலும் போகிறது என்றால், பித்தம் இறங்கும் இடத்தில் அடைப்பு உள்ளது என அர்த்தம்.உடனே டாக்டரை பார்க்க வேண்டும்.